வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

ஒரே கதையை 2 படமாக எடுத்து ரசிகர்களை குழப்பிய இயக்குனர்கள்.. என்ன கொடுமை பாஸ் இதெல்லாம்

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அந்த கதையை பின்பற்றி பல படங்கள் வருவதுண்டு. சில இயக்குனர்கள் வெற்றி பெற்ற படத்தின் நடிகர்களை வைத்து அதே பாணியில் ஒரு படத்தையும்  இயக்கியுள்ளனர். இது படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு குழப்பத்தையும் உண்டு பண்ணும். இவ்வாறு  நம்மை குழப்பிய சில திரைப்படங்கள்.

பசும்பொன் மற்றும் கும்மிபாட்டு – இந்த இரண்டு படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களாக சிவகுமார், ராதிகா மற்றும் பிரபு ஆகியோர்  நடித்திருப்பார்கள். இரண்டு படமும் கிராமத்து பின்னணியை மையப்படுத்தியே இருக்கும். கதையின் நாயகன் பிரபு இரண்டிலுமே தன் பெற்றோர்களிடம் கோபப்பட்டு தனியாக வசிப்பார். இந்த இரண்டு படங்களையும் பார்க்கும் ரசிகர்கள் குழப்பத்தில் படத்தின் பெயரை மாற்றி கூறுவதும் உண்டு. பசும்பொன் திரைப்படத்தை இயக்குனர் பாரதிராஜா இயக்கியுள்ளார். கும்மிப்பாட்டு திரைப்படத்தை இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கியுள்ளார்.

காலம் மாறிப்போச்சு மற்றும் விரலுக்கேத்த வீக்கம் –  இந்த இரு படங்களும் மூன்று நாயகர்களின் குடும்பங்களை பற்றி எடுக்கப்பட்டிருக்கும். குடும்பத்தை சரியாக கவனிக்காத நாயகர்கள், அதனால் உண்டாகும் பிரச்சனைகள் இதுவே இந்த படங்களின் கதை. இந்த இரண்டு படங்களையும் வி சேகர் இயக்கி, திருவள்ளுவர் கலைக்கூடம் தயாரித்துள்ளது.

கண்ணுக்குள் நிலவு மற்றும் காதலுக்கு மரியாதை – நடிகர் விஜய் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் காதலுக்கு மரியாதை. இப் பட வெற்றிக்குப் பிறகு அதில் நடித்த நடிகர்களை கொண்டு கண்ணுக்குள் நிலவு என்ற திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களாக  நடிகர் விஜய், ஷாலினி, சார்லி, தாமு, ஸ்ரீவித்யா போன்றோர் நடித்திருந்தனர். இந்த இரண்டு படங்களையும் இயக்குனர் பாசில் இயக்கியுள்ளார்.

கந்தா கடம்பா கதிர்வேலா மற்றும் திருப்பதி ஏழுமலை வெங்கடேசா – இந்த இரண்டு படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களாக பிரபு, எஸ் வி சேகர், விவேக், வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். நாயகர்கள் தங்கள் மனைவிகளை சமாளிப்பது போன்ற கதையே இந்த இரண்டு படத்தின் கதை. இந்த இரண்டு படங்களையும் இயக்குனர் ராம நாராயணன் இயக்கியுள்ளார்.

நம்மை அதிக அளவில் குழப்பியதில் இந்தப் படங்களுக்கு பெரும் பங்கு உண்டு. ஒரே அம்சத்துடன் எடுக்கப்பட்டிருந்தாலும் இந்த திரைப்படங்களும் ரசிகர்களை கவர்ந்தது.

Trending News