அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள வலிமை படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது முழுவதும் முடிவடைந்து வலிமை படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
எப்போதுமே ஒரு படம் வெளியான பின்னர் தான் அந்த படம் லாபம் பெற்றுள்ளதா அல்லது நஷ்டம் அடைந்துள்ளதா போன்ற விவரங்கள் தெரியவரும். ஆனால் தற்போது ஒரு படம் வெளியாகும் முன்பே பல வழிகளில் வியாபாரம் ஆகிவிடுவதால் அதன் லாப நட்ட கணக்கை முன்கூட்டியே கணித்து விடுகிறார்கள்.
அந்த வகையில் தற்போது வலிமை படம் அதன் தயாரிப்பாளருக்கு லாபமா நஷ்டமா என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி வலிமை படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் சுமார் 150 கோடி. ஆனால் படம் கடந்த 2019ஆம் ஆண்டே தொடங்கி விட்டது. இருப்பினும் கொரோனா நோய் தொற்று, ஊரடங்கு, டெக்னிக்கல் பிரச்சனை மற்றும் சில பல காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.
அதனால் தான் எப்போதோ வெளியாக வேண்டிய வலிமை படம் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது வெளியாக உள்ளது. இந்நிலையில் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள வலிமை படம் தற்போது வரை சுமார் 161 கோடி வரை வியாபாரமாகி இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி பார்த்தால் பட்ஜெட்டுக்கு மேல் 11 கோடி ரூபாய் லாபம் தான் கிடைத்துள்ளது.
இருப்பினும் 150 கோடி ரூபாய்க்கு இரண்டு ஆண்டுகள் வட்டி போட்டால் மிகப்பெரிய தொகை வருகிறது. அந்த கோணத்தில் பார்த்தால் இந்த11 கோடி ரூபாய் எல்லாம் லாப கணக்கில் வராது. அதுமட்டுமல்ல எப்படி பார்த்தாலும் கூட்டி கழித்து பார்த்தால் நஷ்டம் தான் வருகிறது. இருப்பினும் படம் வெளியானால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என கூறுகிறார்கள்.