திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

2021 எதிர்பார்ப்பை கிளப்பி ஏமாற்றிய 10 படங்கள்.. விஜய் சேதுபதி சறுக்கிய 3 படங்கள்

சென்ற ஆண்டு கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்குகளில் படங்கள் வெளியாகத் தொடங்கியது. இதில் பல எதிர்பார்ப்புகளுடன் வந்த முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. ரஜினி, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, சிம்பு, ஆர்யா போன்ற நடிகர்களின் படங்கள் சென்ற ஆண்டு வெளியாகி ஏமாற்றத்தை தந்துள்ளது.

அண்ணாத்த : சிறுத்தை சிவா இயக்கத்தில் சென்ற ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் அண்ணாத்த. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தது. ஆனால் இப்படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. ரசிகர்களுக்கு அண்ணாத்த படம் ஏமாற்றத்தை அளித்தாலும் வசூலை வாரிக் குவித்தது.

ஜகமே தந்திரம் : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்திருந்த படம் ஜகமே தந்திரம். பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் முழுவதும் திருப்தி தராத படமாக இருந்தது. தனுஷ் ரசிகர்களுக்கு ஜகமே தந்திரம் படம் ஏமாற்றத்தைத் தந்தது.

லாபம் : விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜகபதி பாபு ஆகியோர் நடிப்பில் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் லாபம். இப்படத்தில் விவசாய சங்க தலைவராக விஜய்சேதுபதி நடித்து இருந்தார். சமீபகாலமாக விஜய் சேதுபதியின் படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த நிலையில் லாபம் படம் ரசிகர்களை ஏமாற்றியது.

ஜெயில் : வசந்த பாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயில். சேரி மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருந்தது ஜெயில் படம். இப்படத்தில் ஜிவி பிரகாஷின் நடிப்பு எதார்த்தமாக இருந்தாலும் கதையில் சுவாரசியம் குறைவாக இருந்ததால் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

பூமி : சமூகம் சார்ந்த கதைகளை கையில் எடுத்து அதில் வெற்றி கண்டவர் நடிகர் ஜெயம் ரவி. அதேபோல் விவசாயத்தின் மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் விதமாக எடுக்கப்பட்ட படம் பூமி. இப்படத்தில் பூமிநாதன் ஆக ஜெயம் ரவி நடித்து இருந்தார். இப்படத்தில் விவசாயத்தை பற்றி இன்னும் வலுவாக சொல்லியிருந்தால் படம் வெற்றி பெற்றிருக்கலாம்.

அனபெல் சேதுபதி : தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டாப்ஸி, ஜெகபதி பாபு, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் நகைச்சுவை கலந்த பேய் படமாக வெளியான திரைப்படம் அனபெல் சேதுபதி. முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தாலும் அவர்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதுவே படத்துக்கு தோல்வியாக அமைந்தது.

காடன் : ராணா, விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், ஸ்ரியா பில்கோங்கர், சோயா உசேன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் காடன். காட்டில் வசிக்கும் மிகப் பெரிய விலங்கான யானையை சுயலாபத்திற்காக வேட்டையாடும் மனிதர்களிடமிருந்து காப்பாற்றப் போராடும் படித்த பழங்குடி மனிதன் தான் காடன். இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளையும், உண்மை காட்சிகளையும் பகுத்தறிய முடியாத அளவுக்கு காடன் படம் இருந்தது.

அரண்மனை 3 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 3 படத்தில் ஆர்யா, ராசி கன்னா, ஆண்ட்ரியா, ஜெரெமையா, சாக்ஷி அகர்வால், விவேக், மைனா நந்தினி, யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தார்கள். அரண்மனை 1,2 படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை அரண்மனை 3 பூர்த்தி செய்யவில்லை என்பது வருத்தம் தான்.

எம்ஜிஆர் மகன் : சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, மிர்னாலினி ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் எம்ஜிஆர் மகன். எந்த கதைக்களமும் இல்லாமல் எதை நோக்கி படம் பயணிக்கிறது என்று தெரியாமல் இருந்தது. எங்கு தொடங்குகிறது எங்கு முடிகிறது என்ற ஒரு குழப்பமாக இருந்தது எம்ஜிஆர் மகன்.

துக்ளக் தர்பார் : விஜய் சேதுபதி நடிப்பில் அரசியல் நகைச்சுவை படமாக வெளிவந்தது துக்ளக் தர்பார். இப்படத்தில் ராஷி கண்ணா, பார்த்திபன், மஞ்சிமா மோகன் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஒருவருக்குள் இருக்கும் இரண்டு விதமான ஆளுமை என்பதை வைத்து துக்ளக் தர்பார் படம் எடுக்கப்பட்டிருந்தது. அரசியல் படம் என்றாலே எதிர்பார்ப்புடன் இருக்கும் நிலையில் கருத்துக்களை நேரடியாக சொல்லாமல் சுற்றி வளைத்து சொல்ல முயற்சித்தது படத்துக்கு தோல்வியாக அமைந்தது.

- Advertisement -spot_img

Trending News