திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

முட்டி போட்டு நடித்த ரகுவரன்.. பல வருடங்களுக்குப் பிறகு சீக்ரெட்டை உடைத்த ரேவதி

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி வில்லன், குணச்சித்திர வேடம் என பழமொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் ரகுவரன். பெரும்பாலும் இவர் வில்லனாக நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

வில்லன் என்றாலே கட்டுமஸ்தான உடலும், கம்பீரமான குரலும் இருக்கவேண்டும் என்ற எல்லோருடைய எண்ணத்தை மாற்றி ஒல்லியான உடல் அமைப்பில் மெல்லிய குரலோடு வில்லத்தனத்தை சினிமாவிற்கு கொண்டு வந்தார் ரகுவரன்.

மணிரத்னம் இயக்கத்தில் 1990ல் வெளியான திரைப்படம் அஞ்சலி. இப்படத்தில் ரகுவரன், ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பல குழந்தை நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய பங்கு ரகுவரனுக்கு உண்டு.

அஞ்சலி படத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைக்கு அப்பாவாக நடித்திருந்தார் ரகுவரன். அறிவுத்திறன் குறைபாடுள்ள குழந்தையை வளர்ப்பதில் பெற்றோர்கள் படும் மன வலியையும், சவால்களையும் தன் எதார்த்தமான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் ரகுவரன்.

பல வருடங்களுக்குப் பிறகு நடிகை ரேவதி அஞ்சலி படத்தை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை கூறி உள்ளார். ரகுவரன் தோற்றத்தில் மிகவும் உயரமானவர். இதனால் ரகுவரன், ரேவதி மற்றும் குழந்தைகள் ஒரே பிரேமில் நடிக்க வேண்டும் என்பதால் ரகுவரன் அந்த சீனில் முட்டிபோட்டு நடித்தாராம்.

சினிமாவில் நேர்த்தியான நடிப்பின் மூலம் பல ரசிகர்களைப் பெற்ற ரகுவரன் அவருடைய 50 வயதில் காலமானார். இன்னும் சிறிது காலம் இருந்தால் டேனியல் மிரான்டா, மார்க் அண்டனி, அரங்கநாதன் போன்ற வலுவான கதாப்பாத்திரங்களை நம்மிடம் விட்டுச் சென்றிருப்பார்.

Trending News