சினிமா துறையை பொறுத்த வரையில் அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பல சங்கங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது நடிகர்களுக்கான சங்கம். இந்த சங்கம் நடிகர், நடிகைகளுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க உதவியாக இருக்கிறது.
50 காலகட்டத்தில் ஒரு நாடக நடிகரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடிகர் சங்கம் தற்போது வரை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அப்போது இந்த சங்கம் நான்கு மொழி நடிகர்களையும் உறுப்பினர்களாக கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கம் என்று அழைக்கப்பட்டது. இதில் பல முன்னணி நடிகர்களும் நிர்வாகிகளாக இருந்துள்ளனர்.
ஒரு முறை இந்த நடிகர் சங்க வளர்ச்சிக்காக நிதி வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக் ஆகியோரை வைத்து ஒரு திரைப்படம் எடுக்க முடிவு செய்யப்பட்டது.
இசைஞானி இளையராஜா இசையமைக்க இருந்த அந்த திரைப்படத்திற்கு பூஜையும் விமரிசையாக நடத்தப்பட்டது. இவர்கள் இந்நாட்டு மன்னர்கள் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தப்பட்டது.
ஆனால் சில காரணங்களால் அந்த திரைப்படம் பூஜையுடனே நின்று போனது. அதன்பிறகு அந்த திரைப்படத்தை எடுக்க யாரும் முன்வரவில்லை. மேலும் சில வருடங்களில் நடிகர் சங்கம் பல கடன் பிரச்சினையில் சிக்கியது. இதனால் நடிகர் சங்கம் அமைக்கப்பட்ட கட்டிடம் அந்த கடனில் மூழ்கும் நிலை ஏற்பட்டது.
இதற்காக விஜயகாந்த் தலைமையில் நடிகர்கள் அனைவரும் இணைந்து வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி அந்த கடனை அடைத்து நடிகர் சங்கத்தை மீட்டனர். தற்போது இந்த நடிகர் சங்க இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.