வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

வித்தியாசமான கதைக்களத்தில் ஜெயம் ரவி.. கப்பலுக்கு கடிவாளம் போடும் அகிலன் வைரல் போஸ்டர்

ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தடத்தை பதித்து இருக்கிறார். பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ஒரு புது ரூட்டில் எப்போதும் பயணிப்பவர் தான் ஜெயம் ரவி. அவரின் ஆரம்பகால படங்கள் எல்லாம் டப்பிங் படங்களாக இருந்தாலும் அதன் பின் அவர் நடித்த பல படங்கள் அவருக்கு ஒரு நிலையான இடத்தை பெற்றுக் கொடுத்தது.

ஜெயம் ரவி திரைத்துறையின் பின்புலத்தில் இருந்து வந்திருந்தாலும் அவர் தன்னுடைய கடின உழைப்பால் தற்போது தொடர்ந்து மார்க்கெட்டில் இருந்து வருகிறார். அவரது மூத்த சகோதரர் ஜெயம் ராஜா மற்றும் ஜெயம் ரவி இருவரும் இணைந்த படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்து இருக்கிறது. அதில் முக்கியமான படம் தனி ஒருவன். எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்கத் தூண்டும் ஒரு படமாக அந்தப் படம் அமைந்தது. ஜெயம் ரவி கேரியரில் சூப்பர் ஹிட் ஆன படமாக அது பார்க்கப்படுகிறது.

அதேபோல சில நேரங்களில் விமர்சனரீதியாக தோல்வியாகும் படங்களிலும் ஜெயம் ரவி நடித்து இருந்தார். அந்த வரிசையில் அவர் சமீபத்தில் நடித்த பூமி என்ற திரைப்படம் முழுக்க முழுக்க விவசாயத்தை மையமா வைத்து எடுக்கப்பட்ட படம் என்று கூறினாலும் படம் முழுக்க அதைப் பற்றியே பேசி அந்த படத்தை சொல்ல வந்த கருத்தை முழுமையாக இறுதிவரை சொல்லாமல் இழுத்துச் சென்று விட்டார் இயக்குனர். இதனால் அந்த படம் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. ஆனால் ஜெயம் ரவியை பொறுத்தவரை அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளில் நடித்து அவரது ரசிகர்களை திருப்திபடுத்தாமல் விடமாட்டார். இப்போது அவர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படி இருக்கையில் தற்போது ஜெயம் ரவியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கப்பலில் பணிபுரியும் ஊழியராக ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் அகிலன் படத்தின் போஸ்டர் தான் அது. இந்த படத்தில் ஷாம் சி எஸ் இசையமைக்கிறார். அவர் தொடர்ந்து கவனிக்க கூடிய ஒரு இசையமைப்பாளராக இருக்கிறார்.

அவரின் இசை சமீப காலத்தில் நல்ல பெயர் வாங்கி வருகிறது.இந்த படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இயக்குனர் N. கல்யாண கிருஷ்ணன் இதற்கு முன்னர் ஜெயம் ரவியுடன் இணைந்து ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடித்த  பூலோகம் படத்தை இயக்கியவர். இந்தப் படம் வடசென்னையில் குத்துச் சண்டையில் திறமையானவர்கள் வியாபார தந்திரத்தால் எப்படி சூறையாடப் படுகிறார்கள் என்று சர்வதேச அரசியல் பேசி இருப்பார் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன்.

ஜெயம் ரவியும் அந்தப் படத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் உடல் எடையை ஏற்றி, இறக்கி நடித்து இருப்பார்.இந்த கூட்டணி இப்போது மீண்டும் இணைந்து இருக்கிறது. படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் என இரண்டுமே கப்பல் துறைமுகத்தில் நடக்கும் அநீதிகளை துவம்சம் செய்ய அகிலன் கிளம்பிவிட்டான் என்பது போல இருக்கிறது. இதுவும் சர்வதேச வியாபாரிகள், வியாபார தந்திரத்தில் நிகழும் விளைவுகளை எடுத்து காட்டும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News