எம். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ள படம்தான் கடைசி விவசாயி. படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல திரைப்பிரபலங்களும் திரைத் துறை சார்ந்தவர்களும் படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் மத்தியிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
இதற்கு முன்னர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான காக்கா முட்டை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான தரமான இயக்குனர் என்ற பெயர் பெற்றவர் மணிகண்டன். அவர் இந்த கடைசி விவசாயி படத்தின் மூலம் தற்போது உலகத்தரமான ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கிறார் என்ற பெயரையும் சந்தித்து இருக்கிறார். படத்தின் தொடக்கத்தில் இருந்து ஒரு கிராமத்திற்கு நம்மை கூட்டி சென்று கிராமத்தில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் கண்முன்னே காட்டி இருக்கிறார் இயக்குனர்.
அது போக ஒரு விவசாயி எந்த அளவிற்கு தற்போது இன்னல்களை சந்தித்து வருகிறார் என்பதையும், விவசாயத்துறை எந்த விளிம்பு நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பது பற்றியும் படத்தில் காட்சி வடிவில் கச்சிதமாக கதையாக சொல்லியிருக்கிறார். படத்தில் நடித்த பல கதாபாத்திரங்கள் இதற்கு முன்னர் நடிப்பில் எந்த அனுபவமும் இல்லை என்பதால் அவர்களுக்காக மெனக்கெட்டு இயக்குனர் நடிப்பு சொல்லித் தந்திருக்கிறார் என்பது திரையில் தெரிகிறது .
ஆனால் அதில் நடித்த வயதானவர் கதாபாத்திரம் ஆரம்பித்து அத்தனைக் கதாபாத்திரங்களும் திரையில் முதலில் தோன்றுவது போல நம் மனதிற்கு தெரியாது. எப்போதும் நாம் பார்த்து சலித்துப்போன ஒரு விவசாயக்கதைதான் இந்தப் படம் என்று நினைத்தவர்களுக்கும், விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பதால் இதுவும் அவரது தோல்விப் படங்களில் ஒன்றாக தான் இருக்கப்போகிறது என்று நினைத்தவர்களுக்கும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. படம் அந்த அளவிற்கு சொன்னதை செய்து காட்டி இருக்கிறது.
இப்படி பல முனைகளிலிருந்து கடைசி விவசாயி படத்திற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் வந்த வண்ணம் இருக்கிறது. இப்படி இருக்கையில் இயக்குனர் மிஷ்கின் அவர்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு அவர் பேசிய பேச்சுதான் சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. அவர் பேசிய அந்த வீடியோவில் தமிழ் சினிமாவை கிழித்து தொங்கவிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில், கடந்த 20 வருடங்களில் என்னடா படம் எடுத்து வச்சிருக்கீங்க..? எவ்வளவு பொறுக்கி படம், பேடி படம் , கேவலமான படங்கள் பார்த்து இருக்கிறோம். அதையெல்லாம் எவ்வளவு பெருசா கொண்டாடி இருக்கிறோம். அப்படி அந்த கேவலத்தை எல்லாம் கொண்டாடின நம்ம இந்த படத்தை கொண்டாடலைனா நம்மலாம் மனுசங்களே இல்ல. இந்த படத்தோட இயக்குனர் மணிகண்டனை கொண்டாடியே ஆக வேண்டும் என்று வழக்கமான தன் பாணியில் விளாசி இருக்கிறார்.
த்ரிஷா இல்லனா நயன்தாரா, இருட்டறையில் முரட்டு குத்து, சமீபத்தில் வெளியான வெங்கட்பிரபுவின் மன்மதலீலை வரை பிட்டு படங்கள் தோற்று போகும் அளவிற்கு ஆபாசத்தை திணித்து வந்த படங்களை குத்தி காண்பித்து பேசி இருக்கிறார். இதுபோக, கதைக்களத்தை நாடி தமிழ் சினிமா சென்றுக் கொண்டிருக்கும் போது, இப்படி அடல்ட் கண்டன்ட் நோக்கியும், அடிதடி மாசாலாப்படங்கள் மத்தியில் இது போன்ற உலகத்தரம் வாய்ந்த படங்கள் வர வேண்டும் என்று இதயத்தை திறந்து தனது குமுறல்களை கொட்டி தீர்த்து இருக்கிறார்.