வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

தேசிய விருது பெற்ற 7 தமிழ் நடிகைகள்.. பிரியாமணியை ஓரம் கட்டிய சீனியர் நடிகை

ஒரு சிறந்த நடிகர், நடிகைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பது என்றால் அது விருதாக மட்டுமே இருக்க முடியும். அவர்களுடைய சிறப்பான நடிப்புக்காக அங்கீகாரம் கொடுக்கும் விதத்தில் தேசிய விருதுகள் கொடுக்கப்படுகிறது. இந்த விருதுகள் அவர்களை ஊக்குவிக்கவும் செய்கிறது. அவ்வாறு தேசிய விருது பெற்ற நடிகைகளை பார்க்கலாம்.

லட்சுமி : தமிழ் சினிமாவில் 70களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி. இவர் நடித்த பல கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. ஒரு கருப்பு வெள்ளை திரைப்படமாக வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை 1976இல் லட்சுமி பெற்றார்.

ஷோபா : நடிகை ஷோபா தன்னுடைய 17வது வயதிலேயே தேசிய விருதை பெற்றார். துரை இயக்கத்தில் வெளியான பசி படத்தில் நடித்ததற்காக ஷோபாவிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. லட்சுமிக்கு அடுத்தபடியாக 3 வருடங்களுக்குப் பிறகு 1979ஆம் ஆண்டு ஷோபா தேசிய விருது பெற்றார்.

சுஹாசினி மணிரத்னம் : தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுஹாசினி. கே பாலச்சந்தர் இயக்கத்தில் சிவக்குமார், சுஹாசினி நடிப்பில் வெளியான திரைப்படம் சிந்து பைரவி. இப்படத்தில் சுஹாசினியின் கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. சிந்து பைரவி படத்திற்காக சுஹாசினிக்கு 1985 ஆம் ஆண்டு தேசிய விருது கிடைத்தது.

அர்ச்சனா : பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் வீடு. இப்படத்தில் ஒரு வீட்டைக் கட்டுவதை நோக்கமாகக் கொண்டு ஒரு சாதாரண நடுத்தர குடும்ப பெண்ணின் உணர்ச்சிகளை கொண்டிருந்தது. இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அர்ச்சனாவிற்கு 1987 ஆம் ஆண்டு தேசிய விருது கிடைத்தது.

பிரியாமணி : கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அமீர் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி நடிப்பில் கிராமத்து சாயலில் வெளியான திரைப்படம் பருத்திவீரன். இப்படத்தில் பிரியாமணி முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை 2007 ஆம் ஆண்டு பிரியாமணி பெற்றார்.

சரண்யா பொன்வண்ணன் : தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது அம்மா, குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் சரண்யா பொன்வண்ணன். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தில் சரண்யா பொன்வண்ணன் தைரியமான அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை 2010இல் சரண்யா பொன்வண்ணன் பெற்றார்.

ஸ்ரீதேவி : தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. மூன்று முடிச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களான ரஜினி, கமலுடன் அதிக படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர் ஹிந்தியில் வெளியான மாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ஸ்ரீதேவி பெற்றார்.

Trending News