சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

நல்ல கதை, ஹீரோ அமைந்தும் படுதோல்வியான படம்.. ரகுவரன் நடிப்பில் அசத்தியும் பயனில்லை

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்பு இன்று தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களாக வலம் வரும் இரண்டு நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து அசத்திய திரைப்படம் அது. இப்படத்திற்கு பெரிய நடிகர்கள், நல்ல கதை மற்றும் பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் இருந்தது.

ஆனால் இந்தப் படம் எங்கே சறுக்கலை சந்தித்தது என்பது தெரியவில்லை. மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் தயாரிப்பாளர் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

அது எந்த திரைப்படம் என்றால் அஜித், விக்ரம், மகேஸ்வரி, ரகுவரன், எஸ்பிபி உள்ளிட்டோர் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த உல்லாசம் திரைப்படம் தான். இதில் அஜித் ஒரு ரவுடியாக நடிக்க விக்ரம் ஒரு பாடகராக நடித்திருப்பார். மகேஸ்வரி அஜித்துக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

மேலும் ரகுவரன் மற்றும் எஸ்பிபி இருவரும் தந்தை கேரக்டரில் நடித்து அசத்தி இருப்பார்கள். அப்போது நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் ஒரு பிரேக் கிடைக்காமல் இருந்தார். அப்போது அவருக்கு கிடைத்த வாய்ப்புதான் இப்படம். இதில் அவர் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

ஆனாலும் இப்படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. ஜேடி ஜெர்ரி இயக்கிய இந்த திரைப்படத்தை பிரபல பாலிவுட் ஹீரோ அமிதாப்பச்சன் தயாரித்திருந்தார். இது அனைவருக்கும் மிகுந்த ஆச்சர்யமான தகவல்தான். அமிதாப்பச்சன் தயாரிப்பில் வெளிவந்த முதல் தமிழ் திரைப்படம் இது.

இதுதான் படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்தது. மேலும் கார்த்திக் ராஜாவின் இசையில் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பரவி நல்ல வரவேற்பை பெற்றது. இவ்வளவு சிறப்புகளை கொண்ட இந்தத் திரைப்படம் தோல்வி அடைந்தது தான் அனைவருக்கும் ஆச்சரியம்.

Trending News