வணக்கம் வாசகர்களே! நாம் புகழின் உச்சியில் இருந்து தங்களது பணத்திமிராலும், பெரும் கோபத்தாலும் வீழ்ச்சியை சந்தித்த சில பிரபலங்களைப் பற்றி இந்த தொடர் கட்டுரையில் காணவிருக்கிறோம். இவர்களது வாழ்க்கை நம்மை போன்ற மக்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்று நம்பி மட்டுமே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரைத் தொகுப்பு குறிப்பிடும் அனைவருமே ஒரு காலத்தில் புகழில் உச்சியில் இருந்தவர்களே. அந்த நிலை செல்ல அவர்கள் சந்தித்த சவால்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மைக் டைசன் – ஆரம்ப காலம்: மைக் டைசன் என்றதுமே பலருக்கு அவர் சார்ந்த குத்துசண்டை துறை நினைவிற்கு வரும். அந்த அளவுக்கு அவரால் அந்த விளையாட்டு துறையே கவனம் பெற்று விளங்கியது என்று கூறினால் அது மிகையாகாது. 80களிலும் 90களிலும் அவர் புகழின் உச்சத்தில் இருந்தார். பெரும் பணக்காரராகவும் இருந்தார். எல்லாவற்றிற்கும் ஒரே காரணம் அவர் பெற்றிருந்த அசாத்தியமான குத்துசண்டை திறமையும் யுக்திகளும்.
டைசனின் வாழ்க்கை அவ்வளவு இனிமையானது என்று குறிப்பிட முடியாதது. அவரது தந்தை புர்செல் டைசன் தான் என்றாலும் அவரது வளர்ப்பு தந்தையான ஜிம்மி கிர்க்பேட்ரிக்கை தான் தந்தை என்று ஆவணங்கள் கொண்டுள்ளார். அவருக்கு ஒரு மூத்த சகோதரனும், 24 வயதிலேயே இறந்துவிட்ட மூத்த சகோதரியும் உண்டு. ஜிம்மி கிர்க்பேட்ரிக் சீக்கிரமே குடும்பத்தை விட்டு விலகி சென்றுவிட்டார். அவரது தந்தையை பற்றி குறிப்பிடும்போது கூட “அவர் நாம் வீதிகளில் காணும் ஓர் சாதரண மனிதன்” என்றே குறிப்பிடுகிறார்.
டைசனின் குடும்பம் பிரவுன்ஸ்வில்லே-க்கு பிழைப்புக்காக செல்கிறது. அங்கும் வசதியான வருமானமோ, வாழ்க்கையோ இல்லை. தாய் படும் இன்னல்களுக்கு எந்த விதத்திலும் டைசன் உதவவில்லை. 16 வயதில் டைசன் தனது தாயை இழந்தார். அதன் பிறகு அவர் குத்துசண்டை குரு கஸ் டி அமெடோவிடம் ஒப்படைக்கப்படுகிறார். முன்னதாக டைசனின் அசாத்திய சண்டை போடும் திறமையை கண்டு அசந்துபோன பாப்பி ஸ்டீவர்ட் என்னும் சிறார் காப்பாளர் தான் அவரை மெருகேற்றி கஸ் டி அமெடோவிடம் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு ரூனி என்பவரது பயிற்சியின் கீழ் டைசன் செதுக்கப்பட்டார்.
அசாத்திய வெற்றிகள்: தனது ஆரம்ப காலங்களில் மிகவும் அசாத்தியமாக பல வெற்றிகளை குவித்தார் டைசன். ஜுனியர் ஒலிம்பிக்கில் ஆரமித்தவர் பல பதக்கங்களை பெற்று கவனம் ஈர்த்தார். 1985-ல் தனது உலகளாவிய குத்துசண்டை வாழ்க்கையை தொடங்கியவர் உலகமே ஆச்சரியப்படும் அளவுக்கு வெற்றிகளை பறித்தார். 28 போட்டிகளில் 26 போட்டிகளை வென்றார். அதில் அதிகமுறை நாக்கவுட் என்று சொல்லப்படும் எதிராளை எழ விடாத அளவுக்கு தாக்கும் முறையில் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடியாக தொடங்கப்பட்ட டைசனின் வாழ்க்கை மேலும் பல அசாத்திய வெற்றிகளை பெற்று தந்தது. பல முன்னணி வீரர்களான பிரேசியர், பெர்குசன், ஜேம்ஸ் ஸ்மித், டோனி டக்கர் போன்றோரை எளிதில் வென்றார். அவர் தோல்வியே காணாத நிலைக்குசென்றார். டைசனுடன் குத்துசண்டை போடுவதற்கே பலரும் தயங்கினர். உலக சாம்பியன் ஸ்பின்க்ஸை நாக்கவுட் செய்ததால் உலக சாம்பியன் ஆனார் டைசன்.
முடிவின் தொடக்கம்: இப்படி பல வெற்றிகளை அடுக்கிக்கொண்டே சென்ற டைசைனின் வாழ்க்கை திசை மாற தொடங்கியது. அவரது மனைவி அவர் மீது விவாகரத்து வழக்கு தொடர முற்பட்டபோது தான் அவரது வீழ்ச்சிக்கு வித்திட்ட முதல் கல். இடைப்பட்ட காலத்தில் தனது வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பயிற்சியாளர் ரூனியையும் அவர் வெளியேற்றினார். அதன் பின்னர் அவரது தற்காப்பு திறமைகள் குறைந்து வந்ததாக பத்திரிக்கைகள் எழுதின. மேலும் அவரது சொந்த வாழ்க்கையின் சோகம் அவரை உலுக்கியது. அதனால் போட்டிகளில் தடுமாற்றம் ஏற்பட்டது.
இவை எல்லாம் அவரை சிதைத்துக்கொண்டு இருக்கும்போதே டைசன் அடுத்த பெரிய ஆபத்தில் சிக்கினார். ஆம் 18 வயது இளம் பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக 1991ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் தொடர்ந்து நடந்த இந்த வழக்கின் இறுதியில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தந்தனை கிடைத்தது. ஆனாலும் அவர் 1995 ஆம் ஆண்டிலேயே சீக்கிரம் வெளியில் வந்துவிட்டார்.
ஜெயிலில் இருந்து வெளியே வந்த டைசன் எளிதாக இரண்டு வெற்றிகளை பெற்றார். ஆனால் அதன் பின்னரே அவருடைய மிகசிறந்த போட்டியாளரான ஹோலி பீல்டை சந்திக்கிறார். உலகம் ஓர் சிறந்த குத்துசண்டை போட்டியை காண தயாரானது. தனது திறமை குறைவதாக எண்ணி குத்துசண்டை விட்டு விலகிய ஹோலி பீல்டு, 1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற போட்டியில் டெக்கனிகள் நாக் அவுட் முறையில் டைசனை வீழ்த்தி மூன்றாவது முறையாக உலக சாம்பியன் ஆனார். அப்போது இருந்தே இருவருக்குள்ளும் குரோதம் தோன்றியது. இருவரும் பேட்டிகள் மூலம் வார்த்தைப் போர் நிகழ்த்தினார்கள்.
ஹோலிபீல்டனுடன் பகை: 1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் அவர்களுக்குள் குத்துசண்டை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த போட்டி அது. டிக்கெட்டுகள், தொலைக்காட்சி உரிமைகள் என்று எல்லாமே பல மில்லியன் டாலர்களை ஈட்டி கொடுத்தது. ஆனால் அந்த போட்டியில் தான் அதுவரை திறமையால் முன்னேறிய டைசன் இழிநிலைக்கு தள்ளப்பட்டார். ஆம், யாரும் எதிர்பாரா வண்ணம் கோபத்தின் உச்சிக்கு சென்ற டைசன் போட்டியின் நடுவே, எதிர் வீரர் ஹோலிபீல்டின் காதை கடித்து துப்பினார். அதை அவர் மீண்டும் செய்த காரணத்தால் போட்டி நிறுத்தப்பட்டது. உலகம் டைசன் மீது வெறுப்பை உமிழத்தொடங்கியது. டைசனின் இருண்டகாலம் ஆரமித்தது என்றே அன்றைய தொலைக்காட்சிகள் அறிவித்தது.
ஓய்வு: அவ்வபோது சில எதிர்பாரா வெற்றிகளை பெற்றாலும் டைசனால் தொடர்ந்து முன்னிலை வகிக்க முடியாமல் போனது. 2003 ஆம் ஆண்டு அவர் திவாலானதாக அறிவிக்கப்பட்டது. அவர் மீது 23மில்லியன் டாலர்கள் கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு டைசன் உலக குத்துசண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். பல குத்துசண்டை ரசிகர்களுக்கும், அவரை கறுப்பின முகமாக கண்டவர்களுக்கும் அது அதிர்ச்சியை கொடுத்தது.
ஓய்வுக்கு பின்னர் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வந்தார் டைசன். அதன் மூலம் அவருக்கு நல்லதொரு வருமானமும் வந்தது. மனிதர் சாதாரண வாழ்க்கை வாழத் தொடங்கினார். 2009-ஆம் ஆண்டு வெளிவந்த ஹாங்கோவேர் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் (டைசனாகவே) நடித்திருந்தார். ஒரு பேட்டியில் தன்னைத்தானே ‘வேஸ்ட்’ என்று குறிப்பிட்டுக்கொண்டார். அவரது வாழ்க்கையால் எந்தவொரு பயனும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.