1990களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய்’ஆக இருந்தவர் டாப் ஸ்டார் பிரஷாந்த். இயக்குனர், நடிகர் தியாகராஜனின் மகனான இவர் வைகாசி பொறந்தாச்சு என்னும் படம் மூலம் அறிமுகமாகி பின்னர் செம்பருத்தி, காதல் கவிதை, ஆணழகன், ஜீன்ஸ், திருடா திருடா, வின்னர், ஜோடி, கண்ணேதிரே தோன்றினால் என பல வெற்றி படங்களில் நடித்தார்.
தனது தந்தை தியாகராஜனின் மூலம் அரசியல் ஆளுமைகளான கலைஞர் கருணாநிதியுடனும், ஜெயலலிதாவுடனும் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றார். ஒரு முறை பிரஷாந்த் அவர்கள் தன் பிறந்தநாளில் ஜெயலலிதாவை சந்திக்க சென்ற போது அவர், உனக்கு அரசியலில் ஆர்வம் உள்ளதா? என கேட்டதற்கு தனக்கு நிறைய படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளதால் அரசியலில் எப்பொழுதும் நாட்டம் இருந்தது இல்லை என உடனே சொல்லிவிட்டார் என தியாகராஜன் ஒரு பேட்டியில் கூறினார்.
கலைஞருடனும் நெருங்கி பழகிய பிரஷாந்த், அவரின் கைவண்ணத்தில் உருவான பொன்னர் ஷங்கர் எனும் படத்திலும் நடித்தார். வெற்றிகரமான நடிகராக வளம் வந்து கொண்டிருந்தபோது தனிப்பட்ட பிரச்சனைகளால் சினிமாவில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்தார் பிரஷாந்த்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு தியாகராஜன் நடித்த மம்பட்டியான் திரைபடத்தின் ரீமேக் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். அந்த பின் ஒரு சில படங்களில் நடித்தாலும் அவரின் பழைய வெற்றியை கொடுக்கவில்லை. மேலும் உடல் எடை கூடி உள்ளதாகவும் குறை கூறப்பட்டது.
தற்போது அது எல்லாவற்றையும் சரி செய்து அந்தகன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். 1990 முதல் 2000களின் முன்னணி நடிகரான பிரஷாந்த் பழைய நிலைக்கு திரும்புவாரா? என ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.