எலான் மசுக் என்றதும் முதலில் நினைவிற்கு வருவது அவரது ஒரு வரி ட்வீட் தான். அந்த ட்வீட் எப்படி உலக நாடுகளின் தலையெழுத்தை தீர்மானிக்கிறது என்று என்னும்போது வியப்பாக இருக்கிறது. இவர் ஒரு நிறுவனத்தின் வர்த்தக பங்கை வாங்கினால் போதும், அடுத்த நிமிடமே அந்த பங்கின் விலை கிடுகிடு என்று உயர்ந்துவிடும். அப்பேற்பட்ட ஆற்றல் மிக்க செல்வந்தர்.
செல்வந்தர் மட்டுமா? அவர் ஒரு விஞ்ஞானி. ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனது நிறுவனத்தின் மூலமாக கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து 45 நிமிடங்களில் உலகையே சுற்றிவரும் அளவுக்கு போக்குவரத்து துறையை புரட்சி செய்ய முயற்சி செய்துவருகிறார். மேலும் அவர் தனது டெஸ்லா மின்சார கார்களின் மூலமாக சாலை போக்குவரத்தில் புரட்சி செய்தவர். இப்போது வரை மின்சார வாகன விற்பனையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். இதெல்லாம் எப்படி சாத்தியம்? வாங்க ஒரு குட்டி ஸ்டோரி அவரை பற்றி பார்க்கலாம்!
எலான் மசுக் பிறந்தது கனடிய நாட்டு மாடல் அழகி ஒருவருக்கும், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஓர் என்ஜினீயர்க்கும். பெற்றோர்கள் 1980ல் விவாகரத்து பெற்றதும் எலான் தனது தந்தையுடன் வசித்து வந்தார். நல்ல வேலை அவர் அம்மாவுடன் இருந்திருந்தால் நடிகராகவோ, மாடலாகவோ இருந்திருப்பார். இளம் வயது முதலே மென்பொருள் கோடிங் எழுதுவதில் கில்லாடியாக இருந்தார். 12ஆம் வயதிலேயே அவர் சொந்தமாக கோடிங் எழுதி அதன் மூலமாக 500$ என்னும் தனது முதல் வருமானத்தை பார்த்தார். நாமெல்லாம் அந்த வயதில் என்ன செய்துகொண்டு இருந்தோம் என்பது நமக்கே வெளிச்சம். 1989ஆம் ஆண்டு தான் எலான் தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேறி கனடா சென்றார். அங்கு இரண்டு படிப்புகளை முடித்த பிறகு அமெரிக்க பல்கலைக்கழகமான ஸ்டாண்டபோர்டில் படிக்க வேண்டி சென்றவர், இரண்டே நாளில் அங்கிருந்து வெளியேறி தனது சொந்த தொழிலை தொடங்கினார்.
2002ல் தனது இணைய ஆப்களை நம்பி தொழில் தொடங்கிய எலான், நான்கே வருடங்களில் பல கோடி ரூபாய்களை சம்பாதித்தார். அவர் உருவாக்கிய பிரபல பேபால் என்னும் பணம் செலுத்தும் அப்பிளிக்கேஷன் 1.5பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கப்பட்டது. அப்போது பல மடங்கு பெரிய நிறுவனமான ஈபே தான் பேபால்-ஐ வாங்கி இருந்தது. தற்போது ஈபே நிறுவனத்தின் நிலைமை என்னவென்று நமக்கே தெரியும். இந்த விற்பனை மூலம் கிடைத்த பணத்தை எலான் மஸ்க் தனது கனவு தொழிலான ஸ்பைஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா மின்சார கார்களில் முதலீடு செய்தார்.
எலான் மசுக் எப்போதுமே தொழில்நுட்பத்தில் சிறந்த ஒரு விஞ்ஞானியாக இருந்தார். இதன் காரணமாக அவரால் எளிதாக தனது படைப்புகளை முழுவதுமாக அறிந்து கொண்டு அதனை மற்றவர்களிடம் இருந்தும் பெற்றுக் கொள்ளும் திறனையும் பெற்று இருந்தார். எந்த ஒரு தொழில்நுட்பத்திற்கும் அடித்தளம் பொறியியல் அறிவாகும். தானே ஒரு பொறியியல் பட்டதாரி என்ற காரணத்தாலும் சந்தைக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்திருந்த காரணத்தாலும் அவரால் அவசர உலகத்தின் அடிப்படை தேவையாக இருந்த மின்சார கார்களின் பேட்டரிகளை பற்றி ஆராய்ந்து சக்திவாய்ந்த திறமையான பேட்டரி செட்டை உருவாக்கினார். இதன் காரணமாக 200 கிலோமீட்டர் 300 கிலோமீட்டர் என்று இருந்த கார்களின் ரெஞ் இவரது கார்களின் வரவால் 500 கிலோ மீட்டருக்கு மேலும் சென்றது. டெஸ்லா காரின் மதிப்பும் மரியாதையும் வெகு சீக்கிரம் உயர்ந்தது.
ஒருபுறம் திறம்பட கார்களை வடிவமைத்துத் விற்பனை செய்து கொண்டிருந்தாலும் மறுபுறம் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலமாக வான்வெளி பயணத்தையும் எளிதாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். உலகத்தை ஒரு மணி நேரத்திற்குள் சுற்றி வரும் அளவுக்கு ராக்கெட்டுகளில் பயணம் செய்யும் முறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் மிக மிக எளிதாக மக்கள் கண்டம் விட்டு கண்டம் செல்வதை குறைவான நேரத்தில் செய்ய முடியும்.
எலான் மசுக்கின் வளர்ச்சி அதிசயமானது என்று கூற இயலாது. அவரது முன்னேற்றத்திற்கு முக்கியமான காரணம் அவரது பொறியியல் அறிவு, விடாமுயற்சி மற்றும் சந்தையை சரியாக யூகித்து தேவையானதை கொடுத்தது. இன்று எலான் மஸ்க் ஒரு நிறுவனத்தை சுட்டிக்காட்டினால் அந்த நிறுவனத்தில் பல மடங்கு பணம் முதலீடு செய்யும் அளவுக்கு அவர் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். மேலும் அவரது நிறுவன பங்குகள் நல்ல விலைக்கு போவதால் அவரால் அதன் மூலமும் மிகப்பெரும் பணத்தை சம்பாதிக்க இயல்கிறது.
எலான் மசுக்கின் இந்த அசாத்திய வளர்ச்சி அவரால் மட்டுமே கட்டமைக்கப்பட்டது. அவர் பயணிக்கும் பாதையை அவர் தெளிவாக முடிவு செய்து வைத்திருந்தார். எலானுக்கு இந்தியர்கள் மீதும் அவர்கள் அமெரிக்காவில் ஆற்றும் பங்களிப்பு மீதும் மிகுந்த மரியாதை உண்டு. அதன் காரணமாகவே அவருடைய நிறுவனங்களில் இந்தியர்கள் பலருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. எலான் மஸ்க் இந்தியாவிலும் தனது மின்சார கார்களின் மூலம் காலூன்ற நினைப்பது நமக்கு நல்லதொரு செய்தி. கூடிய விரைவில் நமக்கும் டெஸ்லாவின் கார்கள் வாங்கக் கூடிய அளவில் கிடைக்கும் என்று நம்பலாம்.
எலான் மசுக் பெரும் பணக்காரர் மட்டுமல்ல மிகவும் துணிச்சலானவர் என்றும் கூறலாம். அவரது கருத்துக்கள் டிவிட்டரில் பெரும்பாலும் ஒரு வரி செய்தியாக நச்சென்று இருக்கும். சமீபத்தில்கூட ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு தனது நிறுவனம் மூலம் இணையவசதி கொடுத்தார். அதேபோல ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகவும் சில ட்வீடுகளை தைரியமாக எழுதினார்.
எலான் மஸ்க் தன்னைத் தானே வடிவமைப்புக் கொண்ட கல்கி என்று சொன்னால் அது மிகையல்ல!