திரையில் தோன்றும் நடிகனை தனது ஆஸ்தான நாயகனாக ஏற்றுக்கொண்டு ரசிகர்கள் அவர்கள் வழி நடப்பதோடு மற்றொரு நடிகரின் ரசிகர்களுடன் சண்டையிடுவதும், போட்டி போட்டு தன்னுடைய நடிகர் தான் பெரியவன் என காட்டி கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.
நடிகர்கள் திரையில் தோன்றுவது போலவே நிஜ வாழ்க்கையிலும் இருப்பார்கள் என நினைத்து சில ரசிகர்கள் கண்மூடித்தனமாக பாசத்தையும், அன்பையும் ஒரு நடிகரிடத்தில் வெளிகாட்டி வருகின்றனர். இதனை பலரும் கண்டித்து வர சில நடிகர்களும் இதனை எதிர்த்து பேசியுள்ளனர்.
எப்பொழுதும் மனதில் படுவதை அப்படியே பேசும் பழக்கம் கொண்ட எம்.ஆர்.ராதா இதனை குறித்தும் கூறியுள்ளார். அவர் கூறுகையில் நாங்கள் சிரிப்பதும், அழுவதும், நல்லது செய்வதும், கேட்டது செய்வதும் நாட்டுக்காக இல்லை காசுக்காக என வெளிப்படையாகவே கூறியுள்ளார். நடிகர்களுக்காக போராடுவதை விட தங்களுக்காக போராடினால் கண்டிப்பாக வாழ்க்கையிலும் வெற்றி பெறுவார்கள் என்பதை பலமுறை கூறியுள்ளார்.
ஆனால் இதனையெல்லாம் ரசிகர்கள் பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. எம்.ஜீ.ஆர் முதல் தற்போதுள்ள தனுஷ், சிம்பு வரை ரசிகர் என்ற பெயரில் கண்முடித்தனமாக இருக்கும் நபர்கள் ஏராளம். பல மேடைகளில் நடிகர்கள் பலரும் முதலில் குடும்பத்தை கவனியுங்கள் என வலியுறுத்தியும் எவரும் அதனை காது கொடுத்து கேட்ட பாடில்லை.
தன்னை பார்த்து ரசிகர்கள் சிகரெட் புடிக்க பழகுகிறார்கள் என அறிந்த ரஜினிகாந்த், மேடையிலேயே தான் புகைப்பழக்கத்தால் கடும் இன்னல்களை சந்தித்துள்ளதாக கூறி, தான் அதை கைவிட்டதை கூறி நீங்கள் கைவிட வேண்டும் என நேரடியாகவே கேட்டு கொண்டுள்ளார். விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் பெரும்பாலும் சமுக வலைதளங்களிலும், படம் வெளியாகும் போதிலும் சண்டையிட்டு கொள்வதை அறிந்த அஜித் ரசிகர் மன்றங்களை கலைப்பதாக அறிவித்திருந்தார். நடிகர் விஜய் ஒவ்வொரு முறையும் மேடையில் பேசும் போது, முதலில் உங்களையும் குடும்பத்தையும் கவனியுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.
நடிகர்கள் எவ்வாறாக கூறினாலும் ரசிகர்கள் கேட்டதாக தெரியவில்லை. இப்போது அஜித், விஜய் ரசிகர்கள் சண்டையிட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ரசிகர்கள் அதையெல்லாம் கொஞ்சம்கூட சிந்தித்துப் பார்ப்பதில்லை. மேலும் படத்தை படமாக பாருங்கள், நடிகர்களை நடிகராக பாருங்கள் என பலரும் கூறி வருகின்றனர்.