புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கே ஜி எஃப் கூட்டணியில் இணையும் சூர்யா.. பிரம்மாண்டமான படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மணிரத்னத்திடம் துணை இயக்குநராக இருந்த சுதா கொங்கரா 2008ஆம் ஆண்டு துரோகி என்ற படத்தையும் பின்னர் 2016ஆம் ஆண்டு மாதவனின் இறுதிச்சுற்று படத்தை இயக்கினார். பெரிய எதிர்பார்ப்பின்றி வெளியான இந்த படம் சுதாவிற்கும் நீண்ட நாட்களாக வெற்றிக்காக காத்திருந்த மாதவனிற்கும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தை ஹிந்தியிலும் வெளியிட்டு வெற்றி கண்டு, அதனை தெலுங்கில் குரு என்ற பெயரில் ரீமேக் செய்து வெற்றி கண்டார்.

பின்னர் சூர்யாவை சூரரைப் போற்று படத்தில் இயக்கியிருந்தார். 2020ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இந்த படம் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த சூர்யாவிற்கு நல்ல வெற்றி படமாக அமைந்தது. தியேட்டரில் வெளியாகியிருக்க வேண்டிய படத்தை இப்படி ஓடிடியில் வெளியிட்டு விட்டீர்களே என ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு பெரும் விமர்சனங்களை அந்த படம் பெற்றது.

பின்னர் இளமை இதோ இதோ, தங்கம் போன்ற ஓடிடி படங்களை இயக்கி இருந்தார். இப்போது சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார். நீண்ட நாட்களாக இவருடைய அடுத்த தமிழ் படத்திற்காக ரசிகர்கள் காத்து வந்தனர். தற்போது அந்த படத்தை தயாரிக்க உள்ள தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கே.ஜி.எஃப் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து படங்களை பிற மொழிகளிலும் தயாரித்து வரும் ஹேம்பாலே பிலிம்ஸ் சுதாவின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. சில கதைகளை கூறப்பட்டாக வேண்டும், இது இந்தியா மொத்தத்தையும் சென்றடையும் என நம்புகிறோம் என பதிவிட்டு, ஒரு புது அத்தியாயத்திற்கு, அழுத்தமான கதையுடன், சுதா கொங்கரா இயக்கத்தில் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் என இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சூர்யா சூரரைப் போற்று, ஜெய் பீம், எதிர்க்கும் துணிந்தவன் படங்களின் வெற்றி மூலம் மறுபடியும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளார். தமிழில் தற்போது அதிகப்படியாக எதிர்ப்பார்க்கும் படங்களில் நடித்து வருகிறார். பாலாவின் அடுத்த படம், வெற்றி மாறனின் வாடிவாசல் என அடுத்தடுத்து மிகப்பெரிய படங்களை கையில் எடுத்துள்ளார்.

ஏற்கனவே அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திராவில் நல்ல மார்க்கெட் கொண்டிருந்த சூர்யா சில படங்களின் தொடர் தோல்வியால் அதனை சற்று இழந்துள்ளார். மற்ற மாநிலங்களில் இருந்து புதிதாக நிறைய பான் இந்திய ஸ்டார்கள் உருவாகியுள்ள நிலையில் சூர்யாவும் தன்னையும் தேசிய அளவில் முக்கிய நடிகராக நிலை நிறுத்த முயற்சிகள் செய்து வருகிறார்.  சூர்யா தான் இதில் கதாநாயகன் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்தது.

Trending News