சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கால்பந்து விளையாட்டின் அரக்கன் கிறிஸ்டியானோ ரொனால்டோ.. புகழின் உச்சத்தை தொட உருவான கதை

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே. இந்த கட்டுரையில் நாம் கால்பந்தாட்ட உலகின் சிகரங்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றி பார்ப்போம். வெற்றி என்பது வீரத்தின் அடையாளம். ஆக்ரோஷத்தின் முடிவு, தோல்விகளின் தலைவிதி மாற்றம். அப்படி களத்தில் எப்போதும் விடாப்படியாக வெற்றிக்காக போராடும் வீரர் தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டு அணிக்காகவும் மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் கிளப்களுக்காகவும் விளையாடி வருகிறார். மெஸ்சியுடன் சேர்த்து இவர் இரு துருவமாக கால்பந்தாட்ட உலகத்தில் கருதப்படுகிறார்.

ரொனால்டோவின் தந்தை அமெரிக்க நடிகர், அதிபர் ரொனால்ட் ரீகன் அவர்களின் விசிறி. அதன் காரணாகவே ரொனால்டோ என்ற இரண்டாம் பெயரை சூட்டினார். ரொனால்டோவின் நாட்டமோ கால்பந்து மீது இருந்தது. 10ஆம் வயதிலேயே அவர் தனித்துவத்துடன் கால்பந்து விளையாட ஆரமித்தார். ரொனால்டோவின் வாழ்க்கை வசதியானது இல்லை. தான் ஏழ்மை நிலையில் இருந்து வந்தவன் என்பதை அவரே கூறியுள்ளார். மேலும் கால்பந்தாட்டம் தான் தன்னை நிச்சயம் உயர்த்தும் என்பதை 14 வயதிலேயே புரிந்துகொண்ட அவர், அவ்விளையாட்டின் மீது தனி கவனம் செலுத்தினார். மிக இளம் வயதிலேயே அவர் லிஸ்பன் அணிக்காக விளையாட தொடங்கினார்.

அவர் பின்னர் இருந்த மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிராக நட்பு போட்டியில் 17 வயதிற்கு உட்பட்ட அணிக்காக விளையாடினார். அதில் சிறப்பாக செயல்பட்ட காரணத்திற்காக அதிக கவனம் பெற்றார். அன்று 3 – 1 என்ற கோல் கணக்கில் பெற்ற வெற்றி அவரை பல மடங்கு உயரத்திற்கு கொண்டு சென்றது. அன்றைய போர்ச்சுகல் பத்திரிக்கை முழுவதும் இடம் பிடித்தார்.

கால்பந்தாட்ட விளையாட்டு என்பது சாதாரண விஷயமில்லை. உடல் தகுதி என்பதை எப்போதும் பேணிக் காக்க வேண்டும். அந்த வகையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ எப்போதுமே தன்னை முதலிடத்தில் இருக்குமாறு உழைப்பார். நடிகர், பாடி பில்டர் அர்னால்ட் அவர்கள் ரொனால்டோ பற்றி கூறும்போது அவரைபோன்ற ஃபிட்டான விளையாட்டு வீரரை நான் பார்த்ததே இல்லை என்று கூறுகிறார். அவர் உடம்பில் 10% அளவுக்கு மட்டுமே கொழுப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

கால்பந்தாட்ட லெஜன்ட் டேவிட் பெக்காம் விலகிய பிறகு சார் பெர்குசன், கிறிஸ்டியானோ ரொனால்டோவை 12.2மில்லியன் பவுண்டு கொடுத்து ஒப்பந்தம் செய்தார். அதன் மூலம் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார். பெர்குசன் சொன்ன காரணத்திற்காக அவர் 7 ஆம் நம்பர் ஜெர்சி அணிந்து ஆடினார். இன்று CR7 என்பதே அவரது அடையாளம் ஆகிப் போனது.

இதன் பிறகு இவரது வாழ்க்கையில் நடந்தது எல்லாமே மேஜிக். இவர் தனது கால்பந்தாட்ட திறமையை ஆட்டும் எல்லா போட்டிகளிலும் காட்டினார். அதன் மூலம் அதிகம் வருமானம் ஈட்டும் கால்பந்தாட்ட வீரர் ஆனார். ஒரு முறை உலகிலேயே அதிக வருமானம் கொண்டவர் (94 மில்லியன் பவுண்ட்) என்ற பெருமையும் பெற்றார். பல உயரிய விருதுகளை வென்ற ரொனால்டோ பெருமை மிகு பாலான் டி விருதை மூன்று முறை பெற்று சாதனை படைத்தார். அவ்வளவு ஏன்? ஒரு பேட்டியின் போது இரண்டு கொக்கோகோலா பாட்டில்களை ஓரமாக வைத்துவிட்டு, தண்ணீர் குடியுங்கள் என்று சைகையில் இவர் காமித்ததற்கே கொக்கோகோலாவின் பங்குகள் பெரும் வீழ்ச்சி கண்டன. அந்த அளவுக்கு மனிதருக்கு ரசிகர் பட்டாளம் உண்டு.

தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறந்த மனிதராக இருக்கிறார் ரொனால்டோ. இதன் காரணமாகவே அவர் மீது பலருக்கு நன்மதிப்பு உண்டு. தாயின் மீது அதிக பாசம் கொண்டவர், இப்போதும் தாயை பராமரிக்கிறார். அவ்வபோது அவர் தனக்காக பட்ட துன்பங்களை எல்லாம் நினைவு கூறுவார். அவ்வளவு ஏன், தனது தாயின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்கவில்லை என்ற காரணத்திற்காக அவர் காதலித்து வந்த ஐரினா ஷைக் என்கிற ரஷிய நாட்டு மாடல் அழகியை பிரிந்தார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ மது அருந்துவது இல்லை. அவருடைய இந்த பிட்னெஸ்க்கு மதுவை தவிர்த்தது முக்கிய காரணம் என்று அடித்து கூறுகிறார். இவரை இந்த காரணத்துக்காகவே இளைஞர்கள் முன்னுதாரணமாக கொள்ளலாம். அதே போல ரொனால்டோவிற்கு டாட்டூ குத்துவது பிடிக்காது. மேலும் டாட்டூ குத்தினால் ரத்ததானம் செய்ய முடியாது என்பதாலும் அதனை இன்றுவரை தவிர்த்து வருகிறார்.

வறுமைக்கோடு என்னும் நிலையில் இருந்த ரொனால்டோ சாதிக்க உதவியது அவரது தாயின் அர்ப்பணிப்பும், கால்பந்தாட்டம் மீது கொண்ட விடாப்பிடி காதலும். விளையாட்டை ஜாலியாக விளையாடுவோர் உண்டு, அதே விளையாட்டை ஆக்ரோஷத்துடன் விளையாடுவோரும் உண்டு. இரண்டாமவர் வெற்றிக்காக இறுதிவரை போராடுவோர். கிறிஸ்டியானோ ரொனால்டோ, இரண்டாவது வகை!

Trending News