திறமைகள் பல இருந்தும் பலராலும் சினிமாவில் எளிதில் ஜெயித்து விட முடியாது. ஓரிரு படங்களில் குறிப்பிடும் படி கதாபாத்திரங்கள் அமைந்தாலும், தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் இன்றி சினிமாவில் இருந்து காணாமல் போயிவிடுவார்கள். இதில் வேறொரு ரகமும் உண்டு. இளமையில் நடிக்க தொடங்கி, சரியான பாத்திரங்கள் அமையாமல் வயது முதிர்ந்த பிறகு வாய்ப்புகளும் நல்ல நல்ல கதாபாத்திரங்களும் அமையும். அப்படி வயதான பிறகு இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் திரு. எம்.எஸ்.பாஸ்கர்.
நாடக நடிகராக தன்னுடைய கலைப் பயணத்தை தொடங்கிய பாஸ்கர், விசுவின் திருமதி ஒரு வெகுமதி படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் நடிகராக அறிமுகமானார். பின்னர் சில படங்களில் சின்ன சின்ன பாத்திரங்களில் நடித்து வந்தார். நடிப்பதை மட்டும் ஆவலாக கொண்டிருந்ததால், பெரிய திரையிலிருந்து சின்ன திரையிலும் பல தொடர்களால் 1990 முதலே நடித்து வந்தார். அப்படி அவர் நடித்த தொடர் தான் சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா. சன் டிவியில் 2000ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒளிபரப்பான இந்த தொடர் தான் முதன் முதலில் எம்.எஸ்.பாஸ்கருக்கு நடிகராக ஒரு அங்கிகாரத்தை கொடுத்தது.
இதற்கு இடையில் நல்ல குரல் வளம் கொண்டிருந்ததால் படங்களில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணிபுரிந்து வந்தார். 1990 வாக்கில் நடிகர் பிரம்மானந்தத்திற்கு குரல் கொடுக்க தொடங்கிய இவர் இப்போது வரை அவருக்கு குரலாக ஒலிக்கிறார். ஆங்கில பிரம்மாண்ட படங்களான ஜுராசிக் பார்க், ஸ்பைடர் மேன் போன்ற படங்களிலும் பின்னணி குரல் கொடுத்துள்ளார். அந்த அளவிற்கு தமிழில் நல்ல உச்சரிப்பும், குரல் வளமும் இவர் கொண்டுள்ளார். சில படங்களில் பாடல்களும் பாடியுள்ளார்.
காமெடி தொடரான சின்ன பாப்பா பெரிய பாப்பாவில் பட்டாபியாக நடித்த இவரை பலரும் பட்டாபி என்ற அழைக்கும் அளவிற்கு பிரபலமானார். அந்த தொடர் கொடுத்த அறிமுகம் மூலம் மீண்டும் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினார். எங்கள் அண்ணா படத்தில் நடிகர் வடிவேலு, பாண்டியராஜுடன் இணைந்து காமெடியில் கலக்கியிருந்தார்.
இவ்வாறு நடித்து கொண்டிருந்த எம்.எஸ்.பாஸ்கர் 2006ஆம் ஆண்டு வெளியான மொழி படத்தில் நடித்ததன் மூலம் நல்ல நடிகராக பெயர் பெற்றார். அந்த படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதை வென்றார். அன்று வரை பட்டாபியாக அறியப்பட்ட அவர், எம்.எஸ்.பாஸ்கராக பல ரசிகர்களையும் சென்றடைந்தார்.
சிம்புதேவனின் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் காட்டு ராஜாவாக நடிப்பதற்கு தனி மொழியினையும் இவர் உருவாக்கியுள்ளார். அந்த படத்திலும் காமெடியில் அனைவரையும் சிரிக்க வைத்தார். மாற்றி மாற்றி காமெடி, குணச்சித்திரம் என தன்னுடைய சிறப்பான நடிப்பை பல படங்களில் வெளிபடுத்தி வந்த இவர், 2017ஆம் ஆண்டு 8 தோட்டாக்கள் படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். சிறு படமான அதில், இவரின் நடிப்பு தான் அந்த படம் வெற்றியடையும் மையப்புள்ளியாக அமைந்த அளவிற்கு சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.
சிறந்த குணச்சித்திர நடிகர், காமெடி நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட் என இப்போது பிஸியாக நடித்து வரும் இவரின் வயது 64. காமெடி, குணச்சித்திரம் என இரு பரிமாணங்களில் இவர் தொடர்ந்து சிறப்பான நடிப்பினை படங்களின் மூலம் இவர் வெளிப்படுத்தி கொண்டே இருக்கிறார். இவர் ஹாலிவுட்டில் நடித்திருந்தால் இந்நேரம் உலகம் போற்றும் சிறந்த நடிகராக பல ஆஸ்கார் விருதுகளை அள்ளியிருப்பார். தற்போது வெளிவந்து ரசிகர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற டாணாக்காரன் படத்தில் மிக அற்புதமான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியிருப்பார் எம்எஸ் பாஸ்கர்