தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோயினாக இருக்கும் சமந்தா மக்களுக்காக பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கும் அவர் ஒரு காலத்தில் ஆயிரம் ரூபாய்க்காக திருமண மண்டபத்தில் பன்னீர் தெளிக்கும் வேலையை செய்திருக்கிறார்.
அதன்பிறகு மாடலிங் செய்து சினிமா துறைக்குள் வந்த அவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. அதன்பிறகு தமிழிலும் பானா காத்தாடி போன்ற திரைப்படங்களில் நடித்து அவர் சிறிது சிறிதாக முன்னேறத் தொடங்கினார்.
அந்த சமயத்தில் அவருக்கு மணிரத்னம் இயக்கிய கடல் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஐ திரைப்படத்திலும் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது கடுமையான தோல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா அந்த படங்களில் நடிக்க முடியாமல் போனது.
அதன் பிறகு சில மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சமந்தா நன்றாக குணமடைந்து மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அப்பொழுது அவர் ஒரு டாக்டரின் உதவியுடன் பிரதியூஷா என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தார்.
தன்னைப் போன்று மக்கள் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் வசதி இல்லாத மக்களுக்கு பல மருத்துவ உதவிகளை செய்ய ஆரம்பித்தார். மேலும் இந்த நிறுவனம் நிறைய மருத்துவமனைகள் உடன் உடன்படிக்கை ஏற்படுத்தி அதன் பெயரில் வசதி இல்லாத மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் அவர் பெண்கள், குழந்தைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல சேவைகளை செய்து வருகின்றார். அதேநேரத்தில் உயிருக்காக போராடும் பல குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றும் நோக்கிலும் இந்த நிறுவனம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
ஆதரவற்ற முதியவர்களுக்கு கண் அறுவை சிகிச்சை முகாம் உட்பட பல இலவச மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்வதில் இந்த தொண்டு நிறுவனம் பல மருத்துவமனைகளுக்கு சப்போர்ட்டாக இருந்து வருகிறது. ரத்தம் முகாம்கள், இலவச இதய அறுவை சிகிச்சை போன்றவற்றிலும் சமந்தா ஆரம்பித்த இந்த நிறுவனம் தன்னால் இயன்ற உதவியைச் செய்து வருகிறது.
அப்படி பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும் வெளியே தெரியாத அளவுக்கு பல நல்ல விஷயங்களை மக்களுக்காக செய்து வருகிறார். இந்த நல்ல குணத்தால் தான் இன்று அவர் ஒரு முன்னணி நட்சத்திரமாக இருக்கிறார் என்று அவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.