புதன்கிழமை, ஜனவரி 15, 2025

திரும்பவும் காமெடியனா நடிக்க வாய்ப்பே இல்லை.. அதிர்ச்சியை கிளப்பிய சந்தானம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சந்தானம். இதைத் தொடர்ந்து இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. இவருடைய காமெடிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும் ஒரு வருடத்திலேயே பல படங்களில் கமிட்டாகி பிசியான நடிகராக இருந்தார்.

மேலும் சில படங்களில் ஹீரோக்களை காட்டிலும் சந்தானத்தின் கதாபாத்திரத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் கதாநாயகன் என்ற அந்தஸ்தை சந்தானம் பெற்றார்.

இதைத்தொடர்ந்து யாருடைய தூண்டுதலின் பேரிலோ நடித்தால் கதாநாயகனாக தான் நடிப்பேன் என தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வருகிறார். ஆனால் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு ஏதும் கிடைக்கவில்லை.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டிக்கிலோனா படம் ஓரளவு ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் ஒரு ஊடகத்திற்கு சந்தானம் பேட்டி அளித்துள்ளார். அதில் பல நகைச்சுவை நடிகர்களைப் பற்றி தன்னுடைய கருத்துக்களை சந்தானம் பகிர்ந்து கொண்டார்.

அதில் விவேக் உடைய நகைச்சுவை பெரியார் சிந்தனையுடன் இருக்கும், அவருடைய இறப்பு தமிழ் சினிமாவுக்கு மிகப் பெரிய இழப்பு எனக் கூறினார். இந்நிலையில் மீண்டும் உங்களை நகைச்சுவை நடிகராக பார்க்கலாமா என்ற கேள்வியை பேட்டியாளர் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த சந்தானம் நான் ஹீரோவாகி விட்டேன், அதனால் என்னுடைய கதாபாத்திரத்தை தாண்டி மீண்டும் காமெடியனாக முடியாது என கூறியுள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி போன்ற நகைச்சுவை நடிகர்கள் உள்ளதால் சந்தானம் மீண்டும் காமெடி நடிகராக வந்தாலும் அவருடைய நகைச்சுவை தற்போது எடுபடாது என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Trending News