தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நடிகை ரோஜா, இயக்குநர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். அதன்பிறகு நடிப்பதை விட்டுவிட்டு அவர் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
பல மேடைகளில் மகளிர்க்காக குரல் கொடுத்து வந்த ரோஜா ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்ட போது அதில் உறுப்பினராக சேர்ந்தார். மேலும் கடந்த 2014ல் நடந்த பொதுத் தேர்தலில் இவர் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் 2019 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தொடர்ந்து தன் வெற்றியை தக்கவைத்துக் கொண்டார்.
தற்போது அவர் ஏபிஐஐசி யின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி அரசியல் வட்டாரத்தில் புகழுடன் இருக்கும் ரோஜாவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடமும் நல்ல பெயர் இருக்கிறது. ஏனென்றால் ஒரு முறை ரோஜா சட்டமன்றத்தில் கலந்து கொள்ள கூடாது என்று இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அந்த வகையில் ரோஜாவுக்கு அவரின் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. அந்த மரியாதையின் வெளிப்பாடாக பாசம் மிகுதியில் ரோஜா செய்த செயல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் ரோஜாவும் பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய ரோஜா பின்னர் ஜெகன்மோகன் ரெட்டியின் காலில் விழுந்து தன் மரியாதையை தெரிவித்தார். இதை எதிர்பார்க்காத முதல்வரும் நெகிழ்ந்து போய் ரோஜாவின் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தார்.
அப்போது ரோஜா அவரின் கையைப் பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ காட்சி தற்போது சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. இந்த வீடியோ சிறு சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ரோஜாவின் இந்த செயலை சிலர் கிண்டல் செய்தாலும், பெரும்பாலான ரசிகர்கள் அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இதைப் பார்ப்பதற்கு ஒரு சகோதரி, சகோதரனின் மேல் காட்டும் அன்பு தான் தெரிகிறது என்று பலரும் ரோஜாவை பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் இது குறித்து தவறான செய்தியை பரப்பி வந்தாலும் மேடையில் இருந்த அனைவரும் இதை மகிழ்வுடன் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.