தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித்திற்கு மேனேஜராக இருப்பவர் சுரேஷ் சந்திரா. அஜித்தின் கால்ஷீட் போன்ற அனைத்தையும் இவர்தான் கவனித்து வருகிறார். மேலும் திரைப்பட மக்கள் தொடர்பாளராக இருக்கும் இவர் நேற்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸ் நட்சத்திர ஹோட்டலில் ஒரு செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
அதில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் பங்கேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அந்த சந்திப்பு முடிந்தவுடன் கிளம்பிய விக்னேஷ் சிவனிடம் பேசுவதற்கு சில செய்தியாளர்கள் முயற்சி செய்துள்ளனர். அதைப் பார்த்த சுரேஷ் சந்திரா புதிய தலைமுறை செய்தியாளர் ஆனந்தனிடம் நீ யார் என்று ஒருமையில் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் சுரேஷ் சந்திராவின் நண்பர்கள் ஆனந்தன் மீது கை வைத்து தள்ளி தாக்குதலில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனால் மன உளைச்சல் அடைந்த ஆனந்தன் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக எப்படி எங்கள் நிறுவனம் குறித்து தவறாக பேசலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பத்திரிக்கையாளர்களிடம் இது போன்று அத்துமீறி நடந்து கொள்வது மற்றும் அநாகரிக மிரட்டல் விடுப்பது ஆகியவற்றிற்கு எதிராக சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட செய்தியாளர் ஆனந்தன் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் எழுத்துப் பூர்வமான புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இந்த விஷயத்தில் காவல்துறை நியாயமாக விசாரித்து சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பல இடங்களில் செய்தியாளர்களுக்கு இதுபோன்ற தாக்குதல்கள், மிரட்டல்கள், அவமானங்கள் அதிகரித்து வருவது ஆரோக்கியமான விஷயம் அல்ல.
பத்திரிக்கையாளர்களை மதிப்புடன் நடத்துவதும், அவர்களை சுதந்திரமாக தங்கள் கடமைகளை செய்ய விடுவதுமே நல்ல சமூகத்திற்கான அடையாளம் என்றும் பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது அஜீத்தின் மேனேஜர் மீது பத்திரிகையாளர் சங்கம் கொடுத்த இந்த புகார் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.