திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா கடந்த 9ஆம் தேதி அன்று தன் காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு ரஜினி, விஜய், ஷாருக்கான் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
மிகவும் விமரிசையாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் பல சடங்குகளும், சம்பிரதாயங்களும் முறைப்படி செய்யப்பட்டது. மேலும் நயன்தாரா அவரின் திருமணத்தையொட்டி பல குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று சென்றனர். முதலில் இவர்களுடைய திருமணம் திருப்பதியில் தான் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் சில காரணங்களுக்காக மகாபலிபுரம் அருகே உள்ள ஒரு ரிசார்ட்டில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. தற்போது திருமணம் நல்லபடியாக முடிந்த பிறகு தம்பதிகள் இருவரும் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக திருப்பதிக்கு சென்றனர்.
அங்கு கோவிலுக்குள்ளே இவர்கள் இருவரும் காலணி அணிந்து சென்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த தேவஸ்தானம் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்தது. உடனே விக்னேஷ் சிவன் எதிர்பாராமல் நடந்த இந்த விஷயத்திற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் நாங்கள் கவனிக்கத் தவறிய இந்த செயலுக்கு மன்னிப்பு கோருகிறேன் என்று தேவஸ்தானத்திற்கு அவர் ஒரு கடிதமும் எழுதி இருக்கிறார். அதன் பிறகு அவர்கள் இருவரும் சுவாமி தரிசனம் முடித்து திரும்பி இருக்கின்றனர். இவர்களுடைய திருமணத்திற்கு பத்திரிக்கையாளர்கள் வர மறுக்கப்பட்டதால் இன்று நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் செய்தியாளர்களை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.