திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், நடிப்பில் மட்டுமல்லாது ஆன்மீகத்திலும் அதிக பற்று கொண்டவர். அதனால் இவர் அடிக்கடி இமயமலை சென்று அங்கு சித்தர்களை சந்திப்பது, தியானம் செய்வது என்று தன்னுடைய மனதை ஒருநிலைப்படுத்தி வருகிறார்.
சில வருடங்களுக்கு முன்பு கூட இவர் சினிமாவை விட்டுவிட்டு ஆன்மீகத்தில் ஈடுபட போவதாக கூட செய்திகள் வெளியானது. ஆனால் அவர் இப்போது வரை சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அது குறித்து பல விஷயங்களை ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது, என்னுடைய தீவிர ரசிகர்கள் சிலர் என்னுடைய கொள்கைகள் பிடித்து போய் அதை பின்பற்றி வருகின்றனர். அதில் சிலர் சன்னியாசியாக மாறி இருக்கின்றனர். ஆனால் நான் இன்னும் நடிகனாகவே இருக்கிறேன்.
என்னுடைய ரசிகர்கள் என்னை ஒரு நடிகனாக பார்க்காமல் என் மீது கொண்ட அன்பின் காரணமாக சன்னியாசியாக மாறி இருப்பது எனக்கு வருத்தத்தை அளித்துள்ளது. என்னுடைய பல படங்களில் நான் குடும்பத்தை பாருங்கள் என்று கூறி இருக்கிறேன்.
அதனால் அவர்கள் அதை கருத்தில் கொண்டு சன்னியாசியாக இருப்பதை விட குடும்பத்தின் மீது அதிக பாசம் செலுத்த வேண்டும். ஒரு நல்ல குடும்பத் தலைவனாக இருப்பதே சிறந்தது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சந்தோஷம், நிம்மதி எல்லாம் வெறும் மாயை தான்.
எனக்கு பணம், புகழ் என்று அனைத்தும் இருக்கிறது. இன்று நான் ஒரு பெரிய உயரத்தில் இருக்கிறேன். ஆனால் நிம்மதி என்ற விஷயம் எனக்கு 10 சதவீதம் கூட கிடைக்கவில்லை என்று மனவேதனையுடன் மிகவும் உருக்கமாக பேசினார். அவருடைய இந்த பேச்சு ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீப காலமாக ரஜினியின் வீட்டில் பல பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது. அவருடைய மூத்த மகள் தன் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இரண்டாவது மகள் விவாகரத்து பெற்று தற்போது மீண்டும் ஒரு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இப்படி அடுத்தடுத்ததாக அவருடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருப்பதால்தான் ரஜினி தனக்கு நிம்மதி இல்லை என்று கூறியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் அவர் இது போன்ற இன்னும் பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்.