புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சினிமாவில் காணாமல் போன 7 காமெடி நடிகர்கள்.. பிக் பாஸுக்கு பிறகு சோலி முடிஞ்சு போன கஞ்சா கருப்பு

ஒரு மூணு மணி நேர பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படத்தில் கதை, பாடல், நடனம், சண்டைக் காட்சி எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு நகைச்சுவையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அவ்வாறு தமிழ் சினிமாவில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் வந்துள்ளனர். ஆனால் சில படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நன்கு பதிந்து ஒரு சில காமெடி நடிகர்களை தற்போது படங்களில் காணமுடியவில்லை.

காதல் சுகுமார் : பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடிப்பில் வெளியான காதல் படத்தில் ஸ்டீபன் என்ற கதாபாத்திரத்தில் பரத்தின் நண்பராக நடித்திருந்தார் சுகுமார். காதல் பரத், காதல் சந்தியா, காதல் சுகுமார் என்று இவர்களின் பேருக்கு அடையாளமாக காதல் படம் அமைந்தது. காதல் சுகுமார் அதன்பின்பு நிறைய படங்களில் நடித்திருந்தாலும் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படவில்லை.

அப்புக்குட்டி : வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அப்புக்குட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சிவபாலன். ஆனால் இப்படத்திற்கு பிறகு அனைவராலும் அப்புக்குட்டி என்றே அறியப்படுகிறார். அதன்பின்பு அழகர்சாமியின் குதிரை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் வீரம், வேதாளம், மரியான் போன்ற படங்களில் நடித்த அப்புக்குட்டி தற்போது சினிமாவில் இருந்த ஒதுங்கி உள்ளார்.

சத்யன் : சத்யராஜின் உறவினரான நடிகர் சத்யன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய்க்கு எதிரியாக சைலன்சர் என்ற கதாபாத்திரத்தில் நண்பன் படத்தில் நடித்திருந்தாலும் துப்பாக்கி படத்தில் விஜய்யின் நண்பனாக சத்யன் நடித்திருந்தார். இவர் நல்ல நகைச்சுவை நடிகர் என்றாலும் தற்போது அவரது நடிப்பில் படங்கள் வெளியாவதில்லை.

பவர் ஸ்டார் சீனிவாசன் : நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களை கொண்டவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து ஐ, கோலி சோடா போன்ற படங்களில் நடித்திருந்தார். பல வருடங்களாக நடிக்காமல் இருந்த பவர் ஸ்டார் பிக் பாஸ் நடிகை வனிதா உடன் ஒரு படத்தில் நடித்து வந்தார். ஆனால் திடீரென உடல் நிலை குறைவு காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

சாம்ஸ் : அஜித்தின் காதல் மன்னன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் சாம்ஸ். விஜய், அஜித், விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த சாம்ஸ் சமீபகாலமாக படங்களில் நடிப்பதில்லை. அவருடைய மகன் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

முத்துக்காளை : 90 களிலேயே தமிழ் சினிமாவிற்கு வந்தவர் நகைச்சுவை நடிகர் முத்துக்காளை. பெரும்பாலும் வடிவேலுடன் இணைந்து இவர் நிறைய படங்களில் நகைச்சுவை செய்துள்ளார். மொழி, சிவாஜி, சீனாதானா 001, பட்டத்து யானை போன்ற பல படங்களில் முத்துக்காளை நடித்துள்ளார்.

கஞ்சா கருப்பு : பிதாமகன் படத்தில் கஞ்சா வியாபாரியாக நடித்ததால் இவரது பெயர் கஞ்சா கருப்பு என மாறியது. அதன்பின்பு பருத்திவீரன் படத்தில் இவரது டக்ளஸ் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் தொடர்ந்து இவரது கதாபாத்திரங்கள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருக்கு நெகடிவ் விமர்சனங்கள் கிடைத்தது. அதனால் தற்போது சினிமாவில் இருந்து மொத்தமாக ஒதுங்கிவிட்டார்.

Trending News