தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட விஜய் தேவரகொண்டா.. லிகர் பட வசூலுக்கு வந்த ஆபத்து!

தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம் உண்டு. தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் லிகர் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

பூரி ஜகன்னாத் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை நடிகை சார்மி தயாரித்துள்ளார். பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். குத்துச்சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் பிரமோஷன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில் விஜய் தேவரகொண்டா உட்பட பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த பிரமோஷன் விழாவில் விஜய் தேவரகொண்டாவிடம் லால் சிங் சத்தா திரைப்படத்தின் தோல்வி பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அமீர்கான் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் சோசியல் மீடியாவில் பல எதிர்ப்புகளை சந்தித்தது. அதன் காரணமாக இப்படம் மோசமான வசூலை பெற்று படுதோல்வி அடைந்தது.

இது குறித்து பேசிய விஜய் தேவரகொண்டா சமூக வலைத்தளங்களில் கிளம்பிய எதிர்ப்புகள் தான் இந்த படத்தின் தோல்விக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தோல்வியால் அமீர்கான் மட்டுமல்லாமல் படத்தில் பணியாற்றிய பல தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

இப்படி அமீர் கானுக்கு ஆதரவாக அவர் பேசியதால் தற்போது சோசியல் மீடியாவில் விஜய் தேவரகொண்டாவுக்கு பல எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. அது மட்டுமல்லாமல் லிகர் திரைப்படத்தை பார்க்க கூடாது என்ற ஹாஷ் டேக்குகளும் பரவி வருகிறது.

இது படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே கிளம்பிய இந்த எதிர்ப்புகளால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் விஜய் தேவரகொண்டா தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக்கொண்டதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.