இயக்குனர் ராம் கோபால் வர்மா த்ரில்லர் பட கதைகளுக்கு பேர் போனவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவருடைய படைப்புகள் அனைத்தும் த்ரில்லர், சைக்கலாஜிக்கல், கொலை, குற்றம், அரசியல் என்பனவற்றை சார்ந்ததாகவே இருக்கும். தெலுங்கு மற்றும் ஹிந்தி இண்டஸ்ட்ரியில் பிரபலமான இவருக்கு சர்ச்சை இயக்குனர் என்ற பெயரே உண்டு.
சமீபத்தில் இவர் இயக்கிய காதல் காதல் தான் திரைப்படம் மிக பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்த படத்தில் அவர் லெஸ்பியன் உறவை பற்றி கூறியிருந்தார். இது தான் சர்ச்சைக்கான காரணம். இயக்குனர் ராம் கோபால் வர்மா தமிழில் நடிகர் சூர்யாவை வைத்து ரத்த சரித்திரம் படத்தை இயக்கியிருந்தார்.
இந்நிலையில் இப்போது இவர் இந்தியாவையே உலுக்கிய ஒரு உண்மை என்கவுண்டர் சம்பவத்தை படமாக்க இருக்கிறார். தெலுங்கானா போலீஸ் ஏற்கனவே இந்த என்கவுண்டர் சம்பவத்தில் சர்ச்சையில் சிக்கி இருக்க, இப்போது இதை படமாக்கினால் பல அரசியல் விளைவுகளை ராம் கோபால் வர்மா சந்திக்க நேரிடும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் திஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் கால்நடை மருத்துவ பெண் ஒருவரை நான்கு வடமாநில இளைஞர்கள் லாரியில் கடத்தி சென்று கற்பழித்து அங்கேயே அருகில் உள்ள பாலத்துக்கு அடியில் எரித்து கொன்று விட்டனர். இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
தெலுங்கானா போலீஸ் அந்த நான்கு குற்றவாளிகளையும் 24 மணி நேரத்தில் CCTV காட்சி உதவியுடன் கைது செய்து சிறையில் அடைத்தது. சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அந்த இடத்திற்கு கூட்டி சென்று விசாரித்த போது அந்த நால்வரும் காவலரை தாக்கி தப்பிக்க முயன்றதாக கூறி தெலுங்கானா போலீஸ் என்கவுண்டரில் அவர்களை கொன்றது. இந்த மொத்த சம்பவமும் 24 மணி நேரத்துக்குள்ளேயே நடந்து முடிந்து விட்டது.
இந்த என்கவுண்டர் ஒரு போலி என்கவுண்டர் என ஹைதிராபாத் உயர் நீதி மன்றத்திலேயும், உச்ச நீதி மன்றத்திலேயும் வழக்குகள் தொடரப்பட்டன. இதை தொடர்ந்து செகந்திராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள அந்த நான்கு பேரின் உடல்களும் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இப்போது வரை இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ராம் கோபால் வர்மா இந்த கதையை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்.