பாக்யராஜ் குடும்பத்தால் கண்கலங்கிய எம்ஜிஆர்.. பல வருடம் கழித்து வெளியான உண்மை சம்பவம்

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சினிமா, அரசியல் என இரண்டிலுமே தனது ஆதிக்கத்தை வெளிக்காட்டி உள்ளார். இதனால் தற்போது இந்த இரண்டு துறைகளிலும் ஆளுமையாக பலருக்கு எம்ஜிஆர் தான் முன்னோடி. அப்படி எம்ஜிஆரை குருவாக நினைத்து சினிமாவில் நுழைந்தவர் இயக்குனர் பாக்யராஜ்.

ஆரம்பத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாக்யராஜ் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையை வளர்த்துக் கொண்டார். இப்போதும் ரசிகர்கள் பாக்யராஜ் படத்தை பார்த்த ரசித்து வருகிறார்கள்.

அந்த அளவுக்கு எவர்கிரீன் படங்களை பாக்யராஜ் கொடுத்துள்ளார். இந்நிலையில் பாக்யராஜ் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். பாக்யராஜின் மகன் சாந்தனுவின் முதல் பிறந்த நாளுக்கு குடும்பத்துடன் எம்ஜிஆர் வீட்டுக்கு சென்றுள்ளார் பாக்யராஜ்.

அப்போது பாக்யராஜின் மூத்த மகளான சரண்யாவும் கூட இருந்துள்ளார். எம்ஜிஆர் வீட்டில் அவரின் புகைப்படத்தை காட்டி தனது மகளிடம் இது யார் என்று பாக்யராஜ் கேட்டுள்ளார். அதற்கு சரண்யா உடனே எம்ஜிஆர் தாத்தா என கூறியுள்ளார். அதைக் கேட்ட எம்ஜிஆரின் செகரட்டரி அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என சொன்னாராம்.

அதாவது எம்ஜிஆருக்கு தாத்தா என்று கூப்பிட்டால் பிடிக்காது, எம்ஜிஆர் மாமா என்று சொல்ல வேண்டும் என செகரட்டரி கூறியுள்ளார். ஆனால் அதை சற்றும் காதில் வாங்காத பாக்யராஜ் மகள் எம்ஜிஆர் வந்தவுடன் தாத்தா என்று கூப்பிட்டாராம். அதைக் கேட்ட எம்ஜிஆர் பாக்யராஜ் மகளை கட்டி அணைத்தாராம்.

அதுமட்டுமின்றி தாத்தா என்று கூப்பிட்டதும் எம்ஜிஆர் கண் கலங்கிவிட்டாராம். இதைப் பார்த்து அங்குள்ள எல்லோருமே அதிர்ச்சி அடைந்தனராம். அப்போது சாந்தனுக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு செயின் போட நினைத்த எம் ஜி ஆர் பாக்யராஜ் மகளுக்கும் சேர்ந்து போட்டாராம்.