சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் பேய் படங்களில் காமெடி, கவர்ச்சி, சென்டிமென்ட் காட்சி என பலவற்றை கலவையாக எடுத்து வைத்து படத்தையும் இயக்குனர்கள் ஹிட்டாகி விடுகின்றனர். அதில் முக்கியமாக ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா சீரீஸ் மற்றும் சுந்தர்.சி நடித்து, இயக்கிய அரண்மனை சீரீஸ் உள்ளிட்ட திரைப்படங்களை கூறலாம்.
ஆனால் இந்த படங்களுக்கெல்லாம் முன்பாக பேய் படங்கள் என்றாலே திகிலும் பயமுறுத்தும் வகையிலும் தான் அமைந்தது. குறைந்தது இரண்டு நாட்களாவது இரவில் தூங்காமல் இருக்கும் வகையில் தமிழ் சினிமாவில் பேய் படங்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமாக ஜெகன்மோகினி, மை டியர் லிசா, உருவம், யார், 13 ஆம் நம்பர் வீடு என பல திரைப்படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவ்வளவு திரைப்படங்களை கண்ட நாம், ஜமீன் கோட்டை என்ற திகில் திரைப்படத்தை பாராட்ட மறந்து விட்டோம் தான் சொல்லியாக வேண்டும். 1995 ஆம் ஆண்டு இயக்குனர் ராமச்சந்தர் இயக்கத்தில் நடிகர் கலைப்புலி சேகரன் நடிப்பில் வெளியான ஜமீன் கோட்டை திரைப்படம் நிமிடத்திற்கு நிமிடம் திகிலூட்டும் வகையில் அமைந்திருக்கும்.
பாழடைந்த பங்களாவான ஜமீன் கோட்டையில் பேய் இருப்பதால் அங்கு யாரும் செல்லாமல் இருந்த நிலையில் பல பொக்கிஷங்கலும் புதையலும் இருப்பதாக நினைத்து, அந்த ஜமீன் கோட்டையில் மாட்டிக்கொள்ளும் அனைத்து கதாபாத்திரங்களும் உண்மையாகவே பேயை பார்த்தவுடன் அரண்டு போய் விடுவார்கள். அந்த நடிப்பை பார்க்கும் நமக்கும் அரண்டு போயிருப்போம்.
ஒரு ஊரில் உள்ள ஜமீன் சாகா வரம் வேண்டும் என்பதற்காக ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்த 100 நபர்களை கொலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. அதில் 99 நபர்களை கொலை செய்த ஜமீன் கடைசி ஒரு நபராக ஹீரோவை டார்கெட் செய்வார். பேய் வரும் காட்சிகளின் போது இசையமைப்பாளர் சிற்பியின் இசை இப்படத்தின் திகிலுக்கு கூடுதல் பலத்தையும் தந்தது.
அப்போது இத்திரைப்படத்தில் காட்டப்படும் கிழவி கதாபாத்திரம்,ஏழு தலைமுறைகளுக்கும் மேலாக ஜமீனின் இதயம் மண்ணுக்குள் புதைந்து துடித்துக் கொண்டிருக்கும் காட்சிகள் படத்தை பார்ப்பவர்களை அலற விட்டது என கூறலாம் .கடைசியில் ஹீரோ ஜமீன் பேயிடம் இருந்து தப்பித்தாரா என்பது தான் இப்படத்தின் கதையாக அமைந்திருக்கும்.