பிக்பாஸ் தர்ஷன் வரிசையில் இணைந்த கவின்..கொட்டும் பட வாய்ப்புகள் , பாஸ் கூட்டணியில்

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஆறு சீசன்களாக மக்கள் விரும்பி பார்த்தாலும், அதில் அதிகமாக எல்லோராலும் விரும்பி பார்க்கப்பட்ட சீசன் என்றால் அது மூன்றாவது சீசன் தான். மேலும் மற்ற சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் கலந்து கொண்ட எல்லோருக்குமே தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களில் வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கவினுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உருவானது. மேலும் கவின் ரசிகர்களால் மக்கள் நாயகன் என்று கூட அழைக்கப்பட்டார். பிக் பாஸை விட்டு வெளியே வந்த பிறகு கவின் லிப்ட் என்னும் திரில்லர் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் கவினுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் இவர் நடித்த திரைப்படம் தான் டாடா.

இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்த டாடா திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் படமாகவும், குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும் இந்தத் திரைப்படம் அமைந்திருக்கிறது. இந்த திரைப்படம் மூலம் சினிமாவில் கவினின் மதிப்பும் உயர்ந்திருக்கிறது.

டாடா திரைப்படம் ரிலீஸ் ஆகி இரண்டு நாட்களில் கவின், உலகநாயகன் கமலஹாசன் அவர்களை நேரில் சந்தித்தார். சந்தித்த பின் கவின் கோவிலுக்கு சென்றேன், கடவுளை நேரில் பார்த்தேன் என்று கூட சொல்லியிருந்தார். இந்த சந்திப்பு கவினுக்கு தற்போது எதிர்பாராத திருப்பமாக அமைந்திருக்கிறது.

நடிகர் கவினை நேரில் அழைத்து வாழ்த்து சொன்ன உலகநாயகன் கமலஹாசன், அவருக்கு பட வாய்ப்பும் கொடுத்திருக்கிறார். கமலஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் கவினை வைத்து ஒரு படம் பண்ண இருக்கிறார்கள். கவினின் நீண்ட நாள் காத்திருப்புக்கும், எதார்த்தமான நடிப்புக்கும் கிடைத்த பரிசு என பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட தர்ஷன் போட்டியை விட்டு வெளியேறும் போது உலகநாயகன் கமலஹாசன், தர்ஷனை வைத்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் படம் தயாரிக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார். தற்போது தர்ஷன் வரிசையில் நடிகர் கவினும் சேர்ந்து இருக்கிறார்.