மேடையில் மட்டும் தான் உங்கள் சமூக நீதியா.? சிவகுமார் குடும்பத்தால் அவதிப்பட்ட மாணவர்கள்

மார்க்கண்டேய நடிகராக இருக்கும் சிவக்குமார் எந்த அளவுக்கு பொறுப்பும், கண்டிப்பும் உடையவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவரைப் போன்றே அவருடைய பிள்ளைகளான சூர்யா, கார்த்தி இருவரும் சமூக பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அதிலும் சூர்யா ஏழை மாணவர்களின் படிப்புக்காக அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறார்.

இப்படி அனைவர் மத்தியிலும் மரியாதைக்குரியவர்களாக இருக்கும் சிவகுமாரின் குடும்பம் தற்போது ஒரு சர்ச்சையை சந்தித்துள்ளது. அதாவது நேற்றைய தினம் சிவகுமார், சூர்யா, ஜோதிகா, அவர்களின் பிள்ளைகள் ஆகியோர் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் அங்கு இருந்திருக்கின்றனர்.

அப்போது வேறு யாரும் அங்கு வர முடியாத படி நுழைவு வாயில் பூட்டப்பட்டு காவலும் போடப்பட்டிருக்கிறது. இதனால் அருங்காட்சியகத்தை பார்க்க வந்த பொதுமக்கள் முதல் மாணவர்கள் வரை அனைவரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். கடந்த மாதம் பல கோடி செலவில் உலக தரத்துடன் கீழடி அருங்காட்சியகம் மக்களின் பார்வைக்கு வந்தது.

அதில் தமிழர்களின் வரலாற்றை குறிக்கும் வகையில் பல விஷயங்களும் இருக்கிறது. இதனாலேயே அந்த அருங்காட்சியகத்தை பார்வையிட பலரும் ஆர்வம் காட்டி வந்தனர். அதன் முதல் கட்டமாக அனைவரும் கட்டணமில்லாமல் அதை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நேற்று முதல் அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் நேற்று காலை 9 மணிக்கே பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் அருங்காட்சியகத்திற்கு வந்திருக்கின்றனர். ஆனால் சிவகுமாரின் குடும்பம் அங்கு வந்த காரணத்தினால் அவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் கடும் வெயிலில் கால் கடுக்க நிற்கும் நிலையும் உருவானது.

இதுதான் தற்போது பெரும் சர்ச்சையாக மாறி இருக்கிறது. மேடையில் மட்டும் மாணவர்களின் நலன், சமூக நீதி என பேசும் சிவகுமார் இப்படி செய்யலாமா என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது. அந்த வகையில் பேசும் பொருளாக மாறி இருக்கும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.