80 மற்றும் 90களின் தமிழ் சினிமா நகைச்சுவை மன்னர்கள் கவுண்டமணி மற்றும் செந்திலின் காமெடி ஆதிக்கத்தில் இருந்தது. இவர்கள் இருவரும் இல்லாத தமிழ் படங்களே இல்லை என்று சொல்லலாம். இவர்களின் காமெடிகளுக்காகவே ஓடிய திரைப்படங்களும் உண்டு. இருவருடைய கூட்டணியில் உருவாகும் காமெடி காட்சிகளுக்கு இன்னும் மெருகேற்ற ஓமக்குச்சி நாராயணன், குண்டு கல்யாணம், கருப்பு சுப்பையா போன்றோர் இருந்தனர்.
இதில் கருப்பு சுப்பையா 1967 லிருந்து 1997 வரை தமிழ் சினிமாவில் ஆக்டிவாக இருந்தவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடி காட்சிகளில் நடித்த பிறகுதான் தமிழ் சினிமா ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டார். அப்போது இரண்டு சுப்பையா இருந்ததால் கருப்பாக இருக்கும் இவருக்கு கருப்பு சுப்பையா என்றும் மற்றொருவருக்கு வெள்ளை சுப்பையா என்றும் பெயர் வைக்கப்பட்டது.
கவுண்டமணி, செந்தில் மற்றும் கருப்பு சுப்பையாவின் காமெடி கூட்டணியில் வந்த காட்சிகள் அனைத்துமே இன்றுமே ரசிக்கும் படியாக இருக்கும். இதில் ஜல்லிக்கட்டு காளை படத்தில் இவர் நடித்த காமெடி காட்சிகள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. ஆப்பிரிக்கா அங்கிள், ஜம்பலகடி பம்பா, இனி நீ வயசுக்கு வந்தா என்ன, போன்ற காமெடி காட்சிகள் இன்று வரை பேசப்பட்டு வருகின்றன.
மேலும் பெரிய மருது திரைப்படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் பித்தளை பொருட்களுக்கு ஈயம் பூசுபவர்களாக நடித்திருப்பார்கள். அதில் ஒரு காட்சியில் கருப்பு சுப்பையா பெரிய அண்டாவுக்கு ஈயம் பூச வேண்டும் என்று சொல்லி சின்ன பாத்திரத்தை கொண்டு வந்து கொடுப்பார். இதனால் கோபமடைந்த கவுண்டமணி அவர் காய்த்து வைத்திருந்த ஈயத்தை மொத்தமாக இவர் உடம்பில் பூசி விடுவார்.
இந்த காமெடி காட்சி இன்று பார்க்கும் பொழுது கூட அவ்வளவு சிரிப்பாக இருக்கும். 1997இல் தெம்மாங்கு பாட்டுக்காரன் திரைப்படத்தில் நடித்த பிறகு கருப்பு சுப்பையா சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார். இவரைப் பற்றிய ஒரு அதிர்ச்சி தரும் தகவலை இயக்குனர் மற்றும் நடிகர் மனோபாலா தற்போது சொல்லி இருக்கிறார்.
சினிமாவில் கவனிக்கப்படாமல் போன கருப்பு சுப்பையா வறுமையின் காரணமாக தெரு நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது 300 ரூபாய் சம்பளத்திற்காக உடம்பெல்லாம் பெயிண்ட் பூசிக்கொண்டு நடிப்பது போல் போடப்பட்டிருந்த காட்சிக்கு இவர் பூசிய பெயிண்ட் உடல் முழுவதும் பரவி அடுத்த நாளே இறந்து விட்டாராம் . மனோபாலா சொன்ன இந்த தகவல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.