பிரம்மாண்டமாக படம் எடுப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இந்திய சினிமாவில் எத்தனையோ மாபெரும் பிரம்மாண்டமான படங்கள் வெளியாகி பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஹாலிவுட் சினிமாவுக்கே போட்டியாக இந்திய சினிமாவிலும் பல நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இப்படிப்பட்ட திரைப்படங்களில் எடுக்கப்படும் ஒரு சிறு காட்சிக்கு கூட கோடி கணக்கில் செலவு செய்த இயக்குனர்களும் உள்ளனர். அந்த வகையில் நடிகை சமந்தா நடிப்பில் பேன் இந்திய படமாக ரிலீசான சாகுந்தலம் படமும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. மகாபாரத புராணக் கதையில் இடம்பெற்ற சாகுந்தலம் பெண்ணின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படத்தை இயக்குனர் குணசேகர் இயக்கிய நிலையில், தயாரிப்பாளர் நீலிமா குணா தயாரித்தார். முதன்முறையாக நடிகை சமந்தா வரலாற்று கதையில் நடித்த நிலையில், இப்படம் குறித்த தனது புது அனுபவங்களை இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு பேசினார். அதில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளுக்கு தானே தன் குரலில் டப்பிங் செய்ததாகவும், இதில் தூய தமிழ் மொழியை பேசத்தான் தனக்கு கஷ்டமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் இப்படத்தில் தான் தலை, கை, கழுத்து என தான் சூடியிருந்த பூக்கள் எல்லாமே உண்மையான பூக்கள் என்பதால் தனது கழுத்து மற்றும் கைப்பகுதிகளில் அந்த பூக்களின் வடுக்கள் பல நாட்கள் இருந்ததாகவும் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் ஒரு பாடலுக்காக சமந்தா அணிந்திருந்த ஆடையின் எடை மட்டும் 30 கிலோ வரை இருந்ததாம். அந்த வகையில் இந்திய சினிமாவில் வேறு எந்த ஒரு நடிகைக்கும் கிடைக்காத ஒன்று சமந்தாவுக்கு இப்படத்தின் மூலமாக கிடைத்துள்ளது.
சாகுந்தலம் படத்தில் அதிகமாக கிராபிக்ஸ் விசுவல் காட்சிகளுக்கு மட்டுமே பல கோடி வரை செலவழித்த படக்குழு, இப்படத்தின் முக்கியமான சாகுந்தலம் கதாபாத்திரத்தில் நடித்த சமந்தாவுக்கு உண்மையான தங்கத்தையும் வைரத்தையும் வாரி வழங்கியுள்ளது. சமந்தா இப்படம் முழுவதும் தங்கம், வைர நகைகளையும், தங்கத்தாலான பட்டாடைகளையும் அணிந்திருக்கிறார்.
என்னதான் பிரம்மாண்டமான திரைப்படங்களாக இருந்தாலும், நடிகைகளின் ஆபரணங்கள் பெரும்பாலும் கவரிங் நகைகளாக தான் இருக்கும். ஆனால் சமந்தா, சாகுந்தலம் படத்தில் அணிந்த நகைகளின் ஒட்டுமொத்த மதிப்பு மட்டுமே 14 கோடியாகும். இது சமந்தாவின் சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். ஒரு கதாபாத்திரத்தை தத்ரூபமாக காட்ட சாகுந்தலம் படக்குழுவினர் இவ்வளவு கோடி செலவு செய்தது, இதுவே இந்திய சினிமாவின் முதன் முறையாகும்.