நடிகர் சித்தார்த் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருப்பார். அதன் மூலம் சித்தார்த்துக்கு ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 5 ஹீரோக்களில் ஒருவராக இவர் நடித்திருந்தாலும் அதன் பின்னர் இவருடைய சினிமா வாழ்க்கை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். இயக்குனர் ஆகும் ஆசையில் சினிமாவுக்குள் நுழைந்த இவர் தற்போது ஹீரோவாகி 14 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.
ஆயுத எழுத்து : மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா மற்றும் மாதவனுடன் இணைந்து சித்தார்த் நடித்த திரைப்படம் ஆயுத எழுத்து. அமெரிக்காவுக்கு செல்வதை குறிக்கோளாக கொண்டிருக்கும் இளைஞராக சித்தார்த் துருதுருவென்று இந்த படத்தில் நடித்திருப்பார். இந்த படத்திற்குப் பிறகு இவருக்கு நிறைய பெண் ரசிகைகள் சேர்ந்தனர். ஒரு கொலை முயற்சியை நேரில் பார்த்த பின் இவரது வாழ்வில் நடக்கும் மாற்றங்கள் இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும்.
காவியத் தலைவன்: இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த் மற்றும் பிரித்திவிராஜ் இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படம் காவிய தலைவன். இந்த படத்தில் சித்தார்த் நாடக கலைஞராக நடித்திருப்பார். சுதந்திரத்திற்கு முன்னான கதை களத்தை இந்த படம் கொண்டிருக்கும். இதில் சித்தார்த் ஒரு நாடக கலைஞராக முழு நீள வசனங்கள் பேசி சிறப்பாக நடித்திருப்பார்.
காதலில் சொதப்புவது எப்படி: இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் சித்தார்த் மற்றும் அமலா பால் இணைந்து நடித்த திரைப்படம் காதலில் சொதப்புவது எப்படி. ஒரு அழகான காதல் கதையை வழக்கமான சித்தார்த்தின் சுறுசுறுப்பான நடிப்போடு சொன்ன திரைப்படம் இது. இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்டது. படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.
அருவம் : இயக்குனர் சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த் மற்றும் கேத்ரின் தெரேசா இணைந்து நடித்த திரைப்படம் அருவம். இந்த படம் திகில் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் சித்தார்த் கட்டுக்கோப்பான அதிகாரியாகவும், ஆக்சன் ஹீரோவாகவும் கலக்கியிருப்பார்.
சிவப்பு மஞ்சள் பச்சை: இயக்குனர் சசி இயக்கத்தில் சித்தார்த், ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து நடித்த திரைப்படம் தான் சிவப்பு மஞ்சள் பச்சை. குடும்ப பின்னணி கொண்ட இந்த கதையில் சித்தார்த் போக்குவரத்து காவலராக நடித்திருப்பார். அலட்டிக் கொள்ளாத தன்னுடைய எதார்த்தமான நடிப்பை இதில் இவர் காட்டியிருப்பார்.
அவள்: இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் சித்தார்த் மற்றும் ஆன்ட்ரியா நடித்த முழு நீள திகில் திரைப்படம் அவள். இந்த படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடித்ததோடு, உதவிய இயக்குனராகவும், இணை தயாரிப்பாளராகவும் பணிபுரிந்து இருக்கிறார். மாய மந்திர ஜாலங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் சித்தார்த் நெகட்டிவ் சேட் கலந்த கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.