கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக பார்க்கப்படும் தளபதி விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என அவருடைய ரசிகர்கள் துடிதுடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை எல்லாம் தளபதி தற்போது காதும் காதுமாய் வைத்து செய்து கொண்டிருக்கிறார்.
ஆனால் இந்த வேலை எல்லாம் அருவருத்தக்க மட்டமான செயல்களாக இருக்கிறது என்று பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான பிஸ்மி விஜய்யை குறித்து கடுமையாக விமர்சித்து இருக்கிறார். கடந்த சில நாட்களாக விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் அம்பேத்கார், தீரன் சின்னமலை உள்ளிட்டோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து கொண்டிருக்கின்றனர்.
இதெல்லாம் விஜய் அரசியலுக்கு வரப்போகிறதற்கான முன்னோட்டமாக தெரிகிறது. அதிலும் மிக சமீபமான காலகட்டங்களில் அதற்கான வேகமும் அதிகரித்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்றால், 2026 ஆம் ஆண்டு வரப்போகிற சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு இப்போதே அதற்கான வேலைகளை வேகப்படுத்தினால் மன்ற நிர்வாகிகளின் மூலம் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கணக்குப் போட்டு இருக்கிறார்
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஓட்டுப் பொறுக்குகிற சமகால அரசியலின் அடுத்த வெர்ஷன் ஆகத்தான் தெரிகிறது. அரசியல்வாதிகளும், இந்து அமைப்பினர்களும் அம்பேத்கரை தங்களுக்கு சொந்தம் ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் ஒடுக்கப்பட்டவர்களின் ஆதரவு அப்போதுதான் நமக்கு கிடைக்கும் என்ற மலிவான நோக்கம் தான். அதிலும் குறிப்பாக மத்தியில் ஆளும் கட்சி என்ன செய்கிறதோ அதையே தான் இப்போது விஜய்யும் செய்து கொண்டிருக்கிறார்.
அவர்களுக்கு என்ன நோக்கமோ அதேதான் விஜய்க்கும் நோக்கமாக இருக்கிறது. அதனால் தான் விஜய்யின் அரசியல் அருவருக்கத்தக்க அரசியலாக இருக்கிறது. ஒருவேளை விஜய் ஆட்சியைப் பிடித்து விட்டால் அவருக்கென்று விசில் அடித்து, பால் ஊற்றிய ரசிகர்கள் தான் நிர்வாகிகளாக இருப்பார்கள். அவர்களின் கையில் எப்படி தமிழகத்தை கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்க முடியும்.
மேலும் விஜய் அரசியலுக்கு வந்தால் மேடைப் பேச்சின் மூலம் இளைஞர்களை வசப்படுத்தி வைத்திருக்கும் சீமானுக்கு தான் பெரிய ஆபத்தாக இருக்கும். ஏனென்றால் அவருடைய ஒரு சில பேச்சுக்களை மட்டுமே கேட்டு ஏதாவது மாற்றம் ஏற்பட்டு விடாதா என, அவர் பின்னால் இருப்பவர்கள் விஜய்யின் பின்னால் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் விஜய் அரசியலுக்கு மட்டும் வந்தால் பல தொகுதிகளில் டெபாசிட் கூட வாங்க முடியாது.
ஏனென்றால் அவர் மலை போல் நம்பி இருக்கும் ரசிகர்களின் சக்தி எப்படிப்பட்டது என்றால், மூன்று நாட்கள் திரையரங்கில் அவருடைய படங்களை ஹவுஸ்புல் ஆக வைத்திருக்க முடியும். அதை தாண்டி அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியாது. முன்பு எம்ஜிஆர் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்ததே மிகப்பெரிய துயரம், மிகப்பெரிய சாபம்.
அவருக்கு அரசியல் களத்தில் கிடைத்த வெற்றி தான் இப்போது விஜய் போன்றோருக்கெல்லாம் அரசியலில் வருவதற்கான ஆசை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் குறி வைத்திருக்கும் விஜய்க்கு தோல்வி பரிசாக கிடைத்து, இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது, வர முடியாது என்ற சூழல் உருவாக வேண்டும். அதை தான் எதிர்பார்ப்பதாக பிஸ்மி சமீபத்திய பேட்டியில் அதிரடியாக பேசி பெரும் பரபரப்பு கிளப்பி உள்ளார்.