லியோ படத்தில் விஜய்யுடன் நடித்த பிக்பாஸ் போட்டியாளர்.. ட்வீட் மூலம் உறுதி செய்த நடிகை

தளபதி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் அக்டோபர் மாதம் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. கிட்டதட்ட 80 சதவீத படப்பிடிப்புகள் தற்போது முடிந்து இருக்கிறது. சென்னைக்கு அடுத்த பையனூரில் சமீபத்தில் படத்திற்கான சண்டை காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டன. தற்போது மீதம் இருக்கும் காட்சிகள் சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு எடுக்கப்பட்டு வருகின்றன. விஜய் ரசிகர்களும் இந்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்கள்.

படத்தில் ஏற்கனவே த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் போன்றவர்கள் நடிப்பது அதிகாரப்பூர்வமாக வெளியான ஒன்று. ஆனால் அவ்வப்போது இந்த படத்தில் நடிக்கும் சின்ன சின்ன கேரக்டர்களை பற்றியும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. லெஜன்ட் சரவணா, பிரபல யுடியூபர் இர்ஃபான் போன்றவர்கள் இந்த படத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது எதுவும் அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தப்படவில்லை.

இதற்கிடையில் பிக் பாஸ் பிரபலம் ஒருவர் இந்த படத்தில் நடிப்பதாக படப்பிடிப்பு ஆரம்பித்த நேரத்திலேயே தகவல்கள் வெளியாகின. உறுதியாக இந்த தகவல் வெளியாகாமல் இவ்வளவு நாள் இருந்தது. தற்போது அந்த பிரபலமே தான் லியோ படத்தில் நடித்திருப்பதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். இது விஜய் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. பலரும் அந்த பிரபலத்திற்கு வாழ்த்துக்கள் சொல்லி கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் கடைசி சீசனில் பங்கேற்ற ஜனனிதான் அந்தப் பிரபலம். இலங்கையை சேர்ந்த இவர் டிக் டாக் வீடியோக்களின் மூலம் பிக் பாஸ் வாய்ப்பை பெற்றார். நடிகை லாஸ்லியாவுக்கு பிறகு இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய இலங்கை வட்டார மொழியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இவர். பிக் பாஸில் இவர் கலந்து கொண்ட பிறகு இவருக்கென்று ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. இருந்தாலும் ஜனனி அந்த நிகழ்ச்சியில் இறுதிவரை வராமல் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு ஜனனி விளம்பரங்கள் மற்றும் மாடலிங் செய்து வந்தார். அப்படிப்பட்ட நேரத்தில் தான் இவருக்கு லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜனனி தன்னுடைய ட்விட்டரில் லியோ படத்தின் ஒரு பகுதியாக நான் இருந்தது ரொம்பவும் பெருமையாக இருக்கிறது. நான் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்து விட்டேன் என்று பகிர்ந்திருக்கிறார். இவர் விஜய்க்கு நெருக்கமான முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் இவருக்கு என்ன மாதிரி ரோல் கிடைத்திருக்கும் என்பது யூகிக்க முடியாமல் தான் இருக்கிறது. ஒரு வேளை இவர் விஜய்க்கு தங்கச்சியாகவோ அல்லது த்ரிஷாவுக்கு தோழியாகவோ நடிக்க வாய்ப்பு இருக்கிறது. மிகக் குறுகிய காலத்திலேயே ஜனனிக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பது அவருக்கும், அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.