ஒடிசா ரயில் விபத்து தான் இப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 288 நபர்களுக்கு மேல் உயிரிழந்துள்ளனர். மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தற்போது பலரும் தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதில் விஜய் டிவி பிரபலம் ஒருவர் பிரதமரை பதவி விலக சொல்லி கருத்து தெரிவித்துள்ளார். விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற விக்ரமன் தற்போது இந்த கோர சம்பவம் குறித்த தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, இந்த விபத்திற்கு ரயில்வே துறையின் அலட்சியம் தான் காரணம்.
அடிப்படை விபத்து தடுப்பு தொழில்நுட்பம் கூட இங்கே முறையாக இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. கவாச் என்னும் விபத்து முன்னெச்சரிக்கை தொழில்நுட்பத்தை வெகு ஆடம்பரமாக விளம்பரப்படுத்தினார்கள். ஆனால் அதை வெகு சில வழித்தடங்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்திவிட்டு வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்க போய்விட்டார் பிரதமர்.
ஆனால் அதையும் புல்லட் ரயில் என பொய் பரப்புரை செய்தார்கள். எந்த ஒரு விஷயத்திற்கும் விளம்பரம் தேவைதான். ஆனால் அது மட்டுமே செயல்திட்டமாக இருக்கக் கூடாது. திறப்பு விழாக்களை எல்லாம் பிரதமர் நடத்துவார். ஆனால் அசம்பாவிதங்கள் என்றால் மட்டும் துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டுமா, செயலற்று நிற்கும் 9 ஆண்டுகால ஆட்சிக்கு இந்த ரயில் விபத்து ஒன்று சாட்சியாக இருக்கிறது.
இதுவே வேதனை கலந்த உண்மை. ஆட்சிக்கு பதிலாக காணொளி காட்சியை மட்டுமே அரங்கேற்றும் பிரதமர் மோடி அவர்கள் இந்த கோர விபத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று அவர் தன்னுடைய கண்டனத்தை ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். விக்ரமனின் இந்த பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அதாவது இரண்டு ரயில்கள் மோதாமல் இருக்க கவாச் என்ற தொழில்நுட்பத்தை ரயில்வே துறை கொண்டு வந்தது. அதன் மூலம் முன்பக்கத்திலிருந்து ரயில் வந்தால் 400 மீட்டர் முன்னதாகவே அந்த ரயிலின் தானியங்கி பிரேக் போடும். ஆனால் விபத்துக்குள்ளான ரயில்களில் இந்த தொழில்நுட்பம் பொருத்தப்படவில்லை. இது குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்போது விபத்து பற்றியும், உயிர்பலி பற்றியும் மக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.