விஜய்யின் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருந்த காமெடி நடிகர்.. இது என்னடா தளபதிக்கு வந்த சோதனை

Thalapathy Vijay: பொதுவாக ஒரு ஹீரோ நடிக்கவிருந்து அதன்பின்னர் மற்றொரு ஹீரோ அந்த படத்தில் நடித்த பல கதைகளை தமிழ் சினிமாவில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரு காமெடி ஹீரோ நடிக்க இருந்த ஒரு படத்தில் தளபதி விஜய் நடித்து, அந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததோடு, விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்திருக்கிறது. இதை பிரபலம் ஒருவர் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

தளபதி விஜய் தற்போது மாஸ் மற்றும் கிளாஸ் ஆக தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் காதல் திரைப்படங்கள் தான் அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற படங்களின் வரிசையில் விஜய் மிகப்பெரிய வெற்றியை பார்த்த திரைப்படம் தான் துள்ளாத மனமும் துள்ளும்.

இயக்குனர் எழில் இயக்கத்தில், சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சௌத்ரி தயாரிப்பில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில், விஜய்யின் அதிர்ஷ்டநாயகியான சிம்ரன் அவருடன் ஜோடியாக நடித்திருந்தார். இன்று வரை 90ஸ் கிட்ஸ் களின் ஆல் டைம் பேவரைட் திரைப்படமாக இது இருக்கிறது. இந்த படத்தின் வாய்ப்பு விஜய்க்கு கிடைத்தது ரொம்பவும் சுவாரஸ்யமாக நடந்திருக்கிறது.

ஒரு கண் பார்வை அற்ற பெண், தன்னுடைய காதலனை அவன் குரலை வைத்து கண்டுபிடிப்பது போல் எழுதப்பட்ட கதையுடன் இயக்குனர் எழில் கோடம்பாக்கத்தில் எல்லா தயாரிப்பாளர்களை சந்தித்து இருக்கிறார். ஆனால் யாருமே இந்த படத்திற்கு ஓகே சொல்லவில்லை. அதே நேரத்தில் வைகைப்புயல் வடிவேலு சினிமாவில் வளர்ந்து கொண்டு இருந்த நேரம் அது. எழில் வடிவேலுவிடம் இந்த கதையை சொல்லி, அவரும் உடனே சம்மதித்திருக்கிறார்.

ஆனால் வடிவேலுவை கதாநாயகனாக வைத்து ஒரு படம் எடுப்பதற்கு அந்த காலகட்டத்தில் எந்த தயாரிப்பாளர்களும் முன் வரவில்லை. அதன் பின்னர் காமெடி நடிகர் வையாபுரி ஒரு முறை தயாரிப்பாளர் சௌத்ரியிடம் இயக்குனர் எழிலை பற்றி சொன்னதோடு, அந்த கதையையும் கேட்க ஏற்பாடு செய்திருக்கிறார். சௌத்ரிக்கு இந்த கதை ரொம்பவும் பிடித்துப் போகவே, அப்போது சூப்பர் குட் பிலிம்சிடம் விஜய்யின் கால்சீட் இருந்ததால் எழிலை விஜய்யை பார்க்க அனுப்பி வைத்திருக்கிறார்.

இயக்குனர் எழில் கதை சொல்லி இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் நடிகர் விஜய்யிடமிருந்து எந்த பதிலும் வரவில்லையாம். அதன் பின்னர் ஆர் பி சௌத்ரி, எழிலை அழைத்துக் கொண்டு நேரிடையாக விஜய்யின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்பொழுது கதையில் தனக்கு சில சந்தேகங்கள் இருப்பதாக கேட்டு, எழிலும் அந்த சந்தேகங்களை தீர்த்து வைத்த பின் விஜய் அந்த படத்தில் நடித்திருக்கிறார். துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் விஜய்யின் சினிமா கேரியரில் ரொம்பவும் முக்கியமான ஒரு படமாகும்.