ஹிட் கொடுத்து காணாமல் போன 6 இசையமைப்பாளர்கள்..
Music Composers: சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்புது இசையமைப்பாளர்கள் அறிமுகமாகின்றனர். அதிலும் ஒரு சில படங்களுக்கு இசையமைத்து மிகப் பெரிய வெற்றி கொடுத்து திடீரென காணாமல் போன ஆறு இசையமைப்பாளர்களை பற்றி பார்ப்போம்.
பாலபாரதி: சின்னத்திரை சீரியல்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த பாலபாரதி, பின்னாளில் சினிமாவிலும் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் 90களில் வெளியான செல்வா இயக்கத்தில் வெளியான தலைவாசல்,அமராவதி போன்ற இரண்டு ஹிட் படங்களுக்கும் இசையமைத்த பெருமைக்குரியவர். இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு ஒரு சில படங்கள் மட்டுமே இசையமைத்த பாலபாரதி, அதன் பின் சினிமாவில் இருந்தே காணாமல் போய்விட்டார்.
கீரவாணி: தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் தான் கீரவாணி. இவர் தமிழில் மம்முட்டி நடிப்பில் வெளியான அழகன், ஆனந்த் பாபு நடிப்பில் வெளியான வானமே எல்லை, ஜாதி மல்லி போன்ற படங்களில் மறக்க முடியாத ஹிட் பாடல்களை கொடுத்தவர். அதன் பின் சில வருடங்கள் என்ன செய்கிறார் என்றே தெரியாமல் இருந்த நிலையில், திடீரென்று ஜென்டில்மேன் 2 படத்திற்கு இசையமைத்தார். பின் ஆர்ஆர்ஆர் படத்தில் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு இசையமைத்து ஆஸ்கார் விருதையும் தட்டி தூக்கினார்.
ரஞ்சித் பரோட்: பிரபுதேவா நடிப்பில் சூப்பர் ஹிட் கொடுத்த விஐபி படத்தை இசையமைத்தவர் தான் பிரபல இசையமைப்பாளர் ரஞ்சித் பரோட். இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் துள்ளல் மிகுந்த பாடல்களாக இருந்ததால், இளசுகளை வெகுவாகக் கவர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இவர் அந்த படத்திற்கு பிறகு உற்சாகம் என்ற படத்திற்கு இசையமைத்தார். அதன்பின் தமிழில் வேறு எந்த படங்களுக்கும் இசையமைக்காமல் ஹிந்தி மொழி படங்களுக்கு மட்டுமே இசையமைத்து பின் காணாமல் போனார்.
ஷிவா: விஜய் நடிப்பில் வெளியான ‘லவ் டுடே’ படத்தில் ரொமான்டிக் காதல் பாடல்களுக்கு இசையமைத்து ஹிட் கொடுத்த இசையமைப்பாளர் ஷிவா, அதன் பின் பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘பூமகள் ஊர்வலம்’ படத்திலும் நல்ல நல்ல பாடல்களை இசையமைத்து ரசிகர்களுக்கு கொடுத்தவர். இந்த படங்களுக்கு பிறகு காதல் சுகமானது, அற்புதம், ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து போன்ற தமிழ் படங்களுக்கும், சில தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்தார். இவர் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து திரைப்படத்தில் ஹரிஹரன் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். இப்படி ஒரு சில படங்கள் மட்டுமே இசையமைத்து ஹிட் கொடுத்து இப்போது காணாமல் போன இசையமைப்பாளர்களுள் ஒருவரானார்.
ஹம்சலேகா: 80களின் பிற்பகுதியில் தென்னிந்திய சினிமாவில், குறிப்பாக கன்னட திரை உலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருந்த இவர், இதுவரை 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல் எழுதி இசையமைத்துள்ளார். இவர் தமிழில் பருவராகம், கொடி பறக்குது போன்ற படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ஆனால் இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு இவர் தமிழில் இசையமைக்காமல் காணாமல் போனார்.
மனோஜ் கியான்: மனோஜ் சரண் கியான் வர்மா ஆகிய இருவரும் சேர்ந்தே தான் எண்பதுகளில் நிறைய ஹிந்தி மற்றும் தமிழ் படங்களுக்கு இசையமைத்தனர் அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தமிழில் ஊமை விழிகள், உழவன் மகன், செந்தூரப்பூவே, இணைந்த கைகள், தாய்நாடு போன்ற படங்களில் மனதை வருடும் நல்ல நல்ல பாடல்களை கொடுத்த இவர்கள், பின்னாளில் எங்கே சென்றார்கள் என்று தெரியாத அளவுக்கு காணாமல் போனார்கள்.
மேற்கூறிய இந்த 6 இசையமைப்பாளர்களும் இசையமைத்த படங்கள் வெற்றியடைந்த பொழுது இவர்களைப் பற்றி யாரும் பேசவில்லை. அந்த சமயத்தில் இந்த படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா என்றுதான் கூறினார்கள். என்னதான் இவர்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் இளையராஜா இருக்கும்பொழுது இவர்களால் அடுத்தடுத்து வெற்றி பெற முடியவில்லை காணாமல் போய்விட்டார்கள்.
