Actor MGR: எம்.ஜி.ஆர் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக நாடகங்கள், சினிமாவில் நடிப்பது என தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். இவரை போல தான் கலைஞர் கருணாநிதியும் நாடகங்களுக்கு வசனம் எழுதுவது, படங்களுக்கு திரைக்கதை எழுதுவது என தனது பணியை ஆரம்பித்தார். அந்த வகையில் இவர்கள் இருவரும் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரான அண்ணாவின் கட்சியில் தான் ஒன்றாக இருந்தனர். ஒருகட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட மன வருத்தத்தால் தனி, தனி கட்சிகளாக பிரிந்தனர்.
அந்த வகையில் எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞர் இருவரும் தமிழக அரசியலில் ஒருவருக்கொருவர் எதிரிகளாக பார்த்து வந்தனர். இதனிடையே கலைஞரின் கட்சியை விட, எம்.ஜி.ஆரின் கட்சி எல்லா விதத்திலும் மக்களை தங்கள் பக்கம் கொண்டு வந்து ஆட்சியையும் பிடித்தனர். இதனிடையே கலைஞரின் வாரிசான மு.க.முத்துவை, எம்.ஜி ஆர் தனது ராஜதந்திரத்தை பயன்படுத்தி அவரை வளர விடாமல் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கலைஞர் கருணாநிதியின் முதல் மனைவியான பத்மாவதியின் மூத்த மகன் தான் மு.க.முத்து. தன் தந்தையை போலவே தானும் சினிமாவில் காலடி எடுத்து வைத்து சாதிக்க வேண்டும் என்ற ஆசை மு.க.முத்துவுக்கு இருந்து வந்துள்ளது. அதன் படி பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு, சமையல்காரன் உள்ளிட்ட சில படங்களில் மு.க.முத்து நடித்துள்ளார்.
மேலும் பல படங்களில் பாடல்களையும் பாடி ரசிகர்களை கவர்ந்தவர். அந்த வகையில் ஒருமுறை நாடக நிகழ்ச்சியில் மேடையில் நடித்து வந்த மு.க.முத்துவை எம்ஜிஆர் கீழிருந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் அருகில் இருந்த ஒரு தயாரிப்பாளர், மு.க.முத்துவின் நடிப்பை பார்த்து வியந்து கண்டிப்பாக நான் இவரை வைத்து படம் தயாரிப்பேன் என எம்.ஜி.ஆரிடம் கூறியுள்ளார்.
உடனே எம்.ஜி.ஆரும், அந்த தயாரிப்பாளரை பார்த்து, என்னிடம் கூறியதை அப்படியே மேடையில் அனைவரிடமும் சொல்லுங்கள் என கூறியுள்ளார். அதன்படி அந்த தயாரிப்பாளரும் மேடை ஏறி கூறிய நிலையில், அதற்கு பின்னர் வந்து பேசிய எம்.ஜி.ஆர், மு.க.முத்துவை நல்லவனாக உங்களிடம் ஒப்படைக்கின்றோம். இன்றுபோல் அவரை நல்லவனாகவே திருப்பித் தரவேண்டும் என அனைவரது முன்னிலையிலும் அந்த தயாரிப்பாளரிடம் கூறினார்.
இதனை கேட்ட மக்கள், கலைஞர் மகன் மீது எம்ஜிஆர் எவ்வளவு பாசமாக இருக்கிறார் என்று பூரித்து அவரை தெய்வம் போல் கொண்டாடினர். இப்படி மு.க.முத்துவுக்கு ஆதரவாக பேசுவதுபோல் அவரது வளர்ச்சியை தனது ராஜதந்திரத்தால் எம்.ஜி ஆர் தடுத்த சம்பவத்தை பார்த்து, நாம் தவறு செய்து விட்டோம் என நினைத்து அந்த தயாரிப்பாளர் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளார். அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி எம்.ஜி.ஆர் இருந்தவரை தனக்கு போட்டியாக யாரையும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.