Marimuthu Passed Away: சீரியல் என்றாலே பெண்கள் தான் விரும்பி பார்ப்பார்கள் என்ற இத்தனை வருட இலக்கணத்தை மொத்தமாக மாற்றிய தொடர் தான் எதிர்நீச்சல். அதிலும் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்திற்காகவே ஆண்களிலிருந்து, குழந்தைகள் வரை இந்த சீரியலை விரும்பி பார்த்து வந்தார்கள். இதில் பல சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களும் அடங்குவார்கள்.
ஒரு உதவி இயக்குனராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய மாரிமுத்துவுக்கு, எதிர்நீச்சல் சீரியலுக்குப் பிறகுதான் சினிமாவில் அங்கீகாரம் என்ற ஒன்றே கிடைத்தது. சினிமா கொடுக்காத அத்தனை வெற்றியையும், வரவேற்பையும் ஒரு சீரியல் அவருக்கு கொடுத்து விட்டது. 50 வயதிற்கு மேல் தான் வெற்றி என்ற ஒரு விஷயத்தை பார்த்த மாரிமுத்து, இன்று திடீர் மரணம் அடைந்திருக்கிறார்.
நடிகர் மாரிமுத்து தன்னுடைய 57வது வயதில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலை மரணம் அடைந்திருக்கிறார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகை ராதிகா இவருடைய மறைவுக்கு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
மாரிமுத்து சினிமாவில் கடந்து வந்த பாதை ரொம்பவே அதிகம். கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து, ராஜ்கிரணின் இரண்டு படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதன் பின்னர் இயக்குனர்கள் மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ் ஜே சூர்யா ஆகியோர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். மேலும் கண்ணும் கண்ணும், புலிவால் என்ற இரண்டு படங்களையும் இயக்கி இருக்கிறார்.
மாரிமுத்து தற்போது சொந்த வீடு ஒன்றை கட்டி கொண்டிருந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட அந்த வீட்டை கட்டி முடித்த முன்பு அங்கு சென்று தான் நிம்மதியான தூக்கத்தை போட வேண்டும் என்று கூட சொல்லியிருந்தார். அவர் எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் அவருடைய குடும்பத்தாரின் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இவருடைய மறைவு தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. அதிலும் இனி எதிர்நீச்சல் சீரியலை இவர் இல்லாமல் நினைத்து கூட பார்க்க முடியாது. எப்பேர்பட்ட திறமைசாலியான நடிகர்கள் ஆதி குணசேகரன் ஆக நடிக்க முயற்சி செய்தாலும், மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுதான் உண்மை. இது எதிர்நீச்சல் சீரியலுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அடி.