Raththam Movie Review- மகளின் இறப்பிற்கு பின் வெளிவந்த விஜய் ஆண்டனியின் ரத்தம்.. க்ரைம் திரில்லர் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Raththam Movie Review: சி எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் தான் ரத்தம். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இதன் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.

புலனாய்வு பத்திரிக்கையாளராக இருக்கும் விஜய் ஆண்டனி தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தால் வேலையை விட்டுவிட்டு தன் மகளுடன் வாழ்ந்து வருகிறார். அப்போது பத்திரிக்கையாளரான அவருடைய நண்பர் கொலை செய்யப்படுகிறார். பிரபல ஹீரோவை பற்றிய தவறான செய்தி வந்ததால் அவருடைய ரசிகர் கொன்றுவிட்டதாக இந்த வழக்கு பயணிக்கிறது.

அதை தொடர்ந்து விஜய் ஆண்டனி மீண்டும் வேலையில் சேர்கிறார். இந்த வழக்கை கண்டறிய தொடங்கும் அவர் அடுத்தடுத்த கொலைகள் பற்றியும் அதற்கு பின்னணியில் யார் இருக்கிறார் என்பதையும் கண்டறிகிறார். உண்மையில் இது தனி நபர் சம்பந்தப்பட்ட விஷயமா அல்லது சமூகப் பிரச்சனையின் மூலம் எதிரிகள் ஆதாயம் தேடுகிறார்களா என்பதை பற்றி சொல்லி இருக்கிறது இப்படம்.

அழுத்தமான கதையாக இருந்தாலும் அதை இயக்குனர் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் கொஞ்சம் சறுக்கி இருக்கிறார். சுவாரசியமாக செல்ல வேண்டிய இடங்களில் அதை தெளிவாக உணர்த்தாமல் கடந்து விடுகிறார். இதுவே கதையின் ஓட்டத்தில் சிறு தொய்வை ஏற்படுத்துகிறது.

வழக்கம் போல விஜய் ஆண்டனி அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆனால் இந்த கதைக்கு அது கொஞ்சம் பொருந்தாதது போல் இருக்கிறது. அதே போன்று மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கான வேலையை செய்திருந்தாலும் கவனம் ஈர்க்கவில்லை.

பின்னணி இசையிலும் தடுமாற்றம் இருக்கிறது. இப்படி பல முரண்பாடுகள் இருப்பதால் கதையுடன் ஒன்ற முடியவில்லை. அந்த வகையில் ரத்தம் என்ற டைட்டிலை பார்த்துவிட்டு பெரிதாக சம்பவம் இருக்கும் என்று நினைத்தால் அதற்கான அறிகுறி தென்படவே இல்லை.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.5/5