வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

காமெடியில் பின்னி பெடல் எடுத்த சந்தானத்தின் 5 படங்கள்.. டைமிங் காமெடியில் பிச்சு உதறிய நண்பேண்டா

Sandhanam Comedy Movies: காலங்காலமாக நகைச்சுவை நடிகர்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் பெரிய இடம் உண்டு. அந்த வகையில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் காமெடிக்கு அடுத்து சந்தானத்தின் நகைச்சுவை பலருக்கும் பிடித்தது. அதுவும் இவருடைய டைமிங் காமெடியில் ஹீரோவை கூட நக்கல் நையாண்டி செய்து கலாய்க்கும் நகைச்சுவை அனைத்தும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. அப்படி காமெடியில் பின்னி பெடல் எடுத்த சந்தானத்தின் படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்

சிவா மனசுல சக்தி: எம் ராஜேஷ் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு சிவா மனசுல சக்தி திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜீவா, அனுயா பகவத், சந்தானம், ஊர்வசி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சந்தானம் மற்றும் ஜீவா உயிர் நண்பர்களாக இருப்பார்கள். ஆனாலும் ஒருவரை ஒருவர் கலாய்த்து நக்கல் அடித்து கொள்வார்கள். முக்கியமாக ஜீவா சோகத்தில் இருக்கும் போது அதற்கு சந்தானத்தை பகடைக்காயாக பயன்படுத்திக் கொள்ளும் காட்சிகள் அனைத்தும் அல்டிமேட் ஆக இருக்கும்.

கண்டேன் காதலை: ஆர் கண்ணன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு கண்டேன் காதலை திரைப்படம் வெளிவந்தது. இதில் பரத், தமன்னா, சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சந்தானம், மொக்கை ராசுவாக தமன்னாவின் மாமனாக நடித்திருப்பார். அந்த வகையில் தமன்னாவை எப்படியாவது கல்யாணம் பண்ண வேண்டும் என்று அவர் பின்னாடியே போய் செய்யும் விஷயங்கள் அனைத்தும் ஹீரோவை விட இவரை தூக்கலாக காட்டப்பட்டிருக்கும். அதிலும் பொண்ணு வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு ஓடிட்டாலே என்று கவலையோடு சொல்லும்போது அப்ப மற்ற நாள் போனா பரவாயில்லையா என்று டைமிங் காமெடியை கொடுத்திருப்பார்.

என்றென்றும் புன்னகை: ஐ அகமது இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு என்றென்றும் புன்னகை திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜீவா, வினய், சந்தானம், த்ரிஷா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஜீவாவின் நண்பராக குழந்தை என்ற கதாபாத்திரத்தில் காமெடியனாக சந்தானம் நடித்திருப்பார். அதுவும் தன் மனைவிக்கு போன் பண்ணி செல்லம் இன்னைக்கு நைட்டு என்ன டின்னர் என்று கேட்பார். அதற்கு அவர் ஒரு டம்ளர் விஷம் இருக்கு என்று பதில் கொடுத்திருப்பார். உடனே சந்தானம் ஓகே நா வர லேட் ஆகும் நீ சாப்பிட்டு படுத்துடு என சொல்லும் டைமிங் காமெடி அனைவரையும் சிரிக்க வைத்து மீம்ஸ்க்கு ட்ரெண்டாகி இருக்கிறது.

கண்ணா லட்டு தின்ன ஆசை: கேஎஸ் மணிகண்டன் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு கண்ணா லட்டு தின்ன ஆசை திரைப்படம் வெளிவந்தது. இதில் சந்தானம், சீனிவாசன், சேது மற்றும் விசாக ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அதிலும் பவர் ஸ்டாரை கலாய்க்கும் விதமாக சந்தனம் அவருடைய காமெடியை ரசிக்கும் படி கொடுத்திருப்பார். அத்துடன் காமெடி மட்டும் இல்லாமல் அவருடைய தோற்றத்தையும் முகபாவனையும் நகைச்சுவையாக காட்டியிருப்பார்.

பாஸ் என்கிற பாஸ்கரன்: எம் ராஜேஷ் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையால் வயிறு குலுங்க சிரிக்கும் அளவிற்கு காமெடி படமாக இருக்கும். அதுவும் நல்லதம்பி என்ற கேரக்டரில் ஆர்யாவுடன் நண்பராக மாட்டிக் கொண்டு படாத பாடு பட்டு தவித்து வருவார்.

- Advertisement -

Trending News