Alphonse Putheran: ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் மலையாள திரையுலகம் பக்கம் திரும்ப வைத்த பெருமை 2015 ஆம் ஆண்டு ரிலீசான பிரேமம் படத்திற்கு உண்டு. இந்த படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். இவர் இன்று தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நான் சினிமாவில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று போட்ட பதிவு ஒன்று ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நிவின் பாலி மற்றும் நஸ்ரியா இணைந்து நடித்த நேரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அந்தப் படத்திலேயே ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து விட்டார். சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டின் என்ற மூன்று இளம் ஹீரோயின்களை தன்னுடைய பிரேமம் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியதோடு, இந்த படத்தினால் இந்திய ரசிகர்களின் வரவேற்பையும் அதிகம் பெற்றார்.
சினிமாவில் இருந்து ஒதுங்கிய அல்போன்ஸ் புத்திரன்
கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அல்போன்ஸ் கடந்த 2022 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த கோல்ட் படத்தை இயக்கினார். இந்த படம் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இன்று அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை, சினிமாவில் இருந்து விலகுகிறேன் என்ற அதிர்ச்சி பதிவை போட்டிருந்தார்.
அந்தப் பதிவில் தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதாகவும், அதை தானே நேற்று தெரிந்து கொண்டதாகவும் சொல்லி இருக்கிறார். தன்னால் முடியாத ஒன்றிற்கு சத்தியம் கொடுக்க விரும்பவில்லை என்றும் பதிவிட்டு இருக்கிறார். சினிமாவை விடுவதற்கு விருப்பமில்லை, வீடியோக்கள், பாடல்கள் என ஓடிடி தளங்களில் ஏதாவது செய்வேன் என்றும், நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என்றும் பதிவிட்டிருந்தார்.
அல்போன்ஸ் புத்திரன் போட்டிருந்த பதிவு
அந்தப் பதிவை ஒரு சில மணி நேரத்திற்குள்ளேயே அவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார். ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்கு அல்போன்ஸ் புத்திரன் வந்த பொழுது அவருடைய உடல் தோற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு வேளை இந்த நோய் இருந்ததால் தான் அவர் அப்படி இருந்தாரோ, என அவருடைய ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தார்கள்.
இருந்தாலும் அவர் உடனே அந்த பதிவை நீக்கி இருப்பது எல்லோருக்கும் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. அல்போன்ஸ் புத்திரன் சமீபத்தில் சாண்டி மற்றும் கோவை சரளா நடித்த கிப்ட் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் இந்த வருடம் இறுதிக்குள் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.