கேப்டன் துயில் கொள்ளப் போவது இங்குதான்.. விஜயகாந்த் உடல் நல்லடக்கம் எப்போது.? வெளியான அறிவிப்பு

Vijayakanth Funeral: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று இறைவனடி சேர்ந்துள்ளார். உடல் நலக்குறைவின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், பொதுமக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை 6.10 மணி அளவில் அவருடைய உயிர் பிரிந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்தின் உடல் அவருடைய இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அங்கு வந்த முதல்வர் ஸ்டாலின் கேப்டன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு அவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். அதை தொடர்ந்து விஜயகாந்தின் உடல் தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது.

தற்போது கேப்டனின் உடலை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டு உள்ளனர். இந்நிலையில் அவருடைய உடல் நாளை மாலை 4.30 மணி அளவில் தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தகவலை விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் தெரிவித்துள்ளார். மேலும் கேப்டனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பல பிரபலங்களும் வந்து கொண்டிருக்கின்றனர். அதில் படப்பிடிப்புக்காக தூத்துக்குடி சென்ற சூப்பர் ஸ்டாரும் தற்போது அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

இப்படியாக ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களையும் கேப்டன் கண்ணீர் கடலில் ஆழ்த்திவிட்டு துயில் கொண்டுள்ளார். அவருடைய உடல் மறைந்தாலும் புகழ் என்றென்றும் நீங்காமல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.