Guardian Movie Review: சபரி மற்றும் குரு சரவணன் இணைந்து இயக்கி இருக்கும் கார்டியன் இன்று வெளியாகியுள்ளது. ஹாரர் மற்றும் திரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில் ஹன்சிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், தங்கதுரை உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதன் விமர்சனத்தை பற்றி இங்கு காண்போம்.
ராகவா லாரன்ஸ் முனி மூலம் பேய் பட சீசனை ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார் அடுத்தடுத்து திரில்லர் படங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் சில படங்கள் மட்டுமே கவனம் ஈர்க்கிறது. அந்த வகையில் இந்த கார்டியன் படமும் முனி படத்தை பட்டி டிங்கரிங் செய்தது போல் தான் உள்ளது.
கதைப்படி எதிலும் அதிர்ஷ்டம் இல்லாதவராக இருக்கும் ஹன்சிகா வேலை தேடி சென்னைக்கு வருகிறார். அங்கு அவருக்கு நல்ல வேலை கிடைப்பது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து சந்தோஷமான விஷயங்களும் நடக்கிறது. இதனால் குழம்பி போன ஹன்சிகாவுக்கு அப்புறம் தான் தெரிய வருகிறது இது அமானுஷ்யத்தின் வேலை என்று.
தன்னை சுற்றி வரும் பேய்க்கு ஒரு சிலரை பழி வாங்க வேண்டும் என்ற வெறி இருக்கிறது. அதற்காக தன்னுடைய உடம்பை வாடகைக்கு கொடுத்து பேயின் ஆசையை நிறைவேற்றி வைக்கிறார் ஹன்சிகா. கிட்டத்தட்ட முனி காஞ்சனா பட கதையை போல் தான் இப்படமும் இருக்கிறது.
வழக்கமாக பழிவாங்கும் கதையில் ஹன்சிகா ஒரு சில இடங்களில் மட்டுமே மிரட்டி இருக்கிறார். முதல் பாதியில் வழக்கமான அப்பாவி பெண்ணாக வரும் இவர் இரண்டாம் பாதியில் கொடூர பேயாக மாறி பழி வாங்குவார். ஆனால் அந்த இடங்களில் இவருடைய நடிப்பு சுத்தமாக எடுபடவில்லை.
அதேபோல் மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை ஆகியோரின் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை. நகைச்சுவை என்ற பெயரில் ஏதோ செய்கிறார்கள். மேலும் வழக்கமான ஃப்ளாஷ் பேக், வில்லன்கள் என அரைத்த மாவை மீண்டும் அரைத்து புளிக்க வைத்துள்ளார் இயக்குனர். அதனாலயே படம் பயமுறுத்துவதற்கு பதிலாக பரிதாபத்தை வரவழைத்துள்ளது. ஆக மொத்தம் கார்டியன்-காப்பாற்ற முடியாத பேய்
சினிமா பேட்டை ரேட்டிங்: 2.25 / 5