Roja Selvamani: மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் நாளை ஆந்திராவில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் மாநிலமே பரபரப்பாக உள்ளது.
மேலும் மக்களவை தேர்தல் மட்டுமில்லாமல் சட்டப்பேரவை தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. அதில் நகரி சட்டப்பேரவை தொகுதியில் நடிகை ரோஜா போட்டியிடுகிறார்.
இதற்கு முன்பே 2014 மற்றும் 2019 ல் நடைபெற்ற தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு ரோஜா வெற்றி பெற்றார். அதனாலேயே தற்போது ஹாட்ரிக் வெற்றியை தட்டி தூக்குவாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
ரோஜாவுக்காக வாக்கு சேகரித்த செல்வமணி
மேலும் மனைவியை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என இயக்குனர் ஆர்கே செல்வமணியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதில் செல்லும் இடமெல்லாம் மக்கள் தங்களுக்கு அமோக வரவேற்பு கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அது மட்டுமின்றி இது வாக்கு சேகரிப்பு போல் தெரியவில்லை. வெற்றி விழா போல் தெரிகிறது எனவும் நம்பிக்கையுடன் பேசி இருந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் தரவில்லை, ஜவுளி பூங்கா அமைத்து தரவில்லை போன்ற குற்றச்சாட்டுகள் பற்றி கேட்டனர்.
அதை மறுத்த ஆர்கே செல்வமணி ரோஜா தொகுதி மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொண்டு தான் இருக்கிறார். நெசவாளர்களுக்கு தேவையான லோன் வசதிகள் உள்ளிட்ட பலவற்றை செய்து தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்படியாக ஆந்திர தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது. அதில் நேற்றுடன் பிரச்சாரம் முடிந்த நிலையில் நாளை நடைபெறும் வாக்குப்பதிவு யாருக்கு வெற்றியை தரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.