ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

Chennai: உனக்கு குழந்தை ஒரு கேடா.? சோசியல் மீடியா நக்கீரர்களால் அனாதையான குழந்தை, பறிபோன உயிர்

Chennai: ஸ்மார்ட் போன்களின் ஆதிக்கம் நிறைந்த இந்த காலகட்டத்தில் சோசியல் மீடியா அதில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால் இது எந்த அளவுக்கு நல்லதோ அதே அளவுக்கு ஆபத்தானதாகவும் உள்ளது.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மக்கள் இதில் வெளியிடும் கருத்துகளும் கமெண்ட்டுகளும் யாரோ ஒருவரை பாதித்துக் கொண்டுதான் இருக்கிறது. அப்படித்தான் தற்போது சோசியல் மீடியாவால் அநியாயமாக ஒரு உயிர் பறிபோய் உள்ளது.

கடந்த மாதம் திருமுல்லைவாயிலில் 7 மாத குழந்தை பால்கனியில் தவறி விழுந்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. நூலிலையில் உயிர்தப்பிய அந்த குழந்தை எப்படியோ காப்பாற்றப்பட்டு விட்டது.

ரம்யாவின் தற்கொலை

ஆனால் அதை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பரவ விட்டவர்கள் இப்போது அந்த குழந்தையை அனாதை ஆக்கியுள்ளனர். அந்த வீடியோ வெளிவந்த போதே குழந்தையின் தாயை தான் அனைவரும் திட்டி தீர்த்தார்கள்.

அதிலும் சோசியல் மீடியா பிரபலம் ஒருவர் உங்களுக்கெல்லாம் குழந்தை ஒரு கேடா? என விமர்சித்திருந்தார். அதை தொடர்ந்து அந்த குழந்தையின் தாய் ரம்யாவை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

அதனால் கடும் மன அழுத்தத்தில் இருந்த ரம்யா தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஒரு மன மாற்றத்திற்காக சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார். ஆனால் போன இடத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சோசியல் மீடியாவால் அனாதையான குழந்தை

இது கடும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் சோசியல் மீடியா தான் இதற்கு காரணம் என்ற கருத்துக்களும் வைரலாகி வருகிறது. உண்மையில் ஒரு தாய் குழந்தையை வேண்டுமென்றே தவற விடுவார்களா?

ஒரு அம்மாவுக்கு இல்லாத அக்கறை யாருக்கு வந்து விடப் போகிறது? என்ற நோக்கத்தில் யாருமே இந்த விஷயத்தை பார்க்கவில்லை. எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தை நெற்றிக்கண்ணை திறந்தாலும் தப்பு தப்பு தான் என நக்கீரர்களாக மாறி பலரும் கருத்து சொன்னார்கள்.

வெளியில் இருக்கும் மக்களே இப்படி என்றால் ரம்யாவை சுற்றி இருக்கும் மனிதர்கள் எப்படி எல்லாம் பேசி இருப்பார்கள். இது எல்லாம் சேர்ந்துதான் அவரை மன அழுத்தத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

அதுதான் அவருடைய தற்கொலைக்கும் காரணமாக இருக்கிறது. ஆனால் இதனால் பாதிக்கப்பட்டது அந்த இரு குழந்தைகள் தான். இனிமேலாவது சோஷியல் மீடியா நியாயவாதிகள் திருந்தினால் நல்லது.

தெரிந்தே தவறு செய்பவர்களை எந்த எல்லைக்கும் போய் தட்டிக் கேட்கலாம். ஆனால் அறியாமல் நடந்த தவறுக்கு கூட்டம் கூட்டமாக சென்று கருத்து சொல்வதை இனிமேலாவது நெட்டிசன்கள் நிறுத்த வேண்டும்.

Trending News