Kumbakonam: கோவில்களின் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்திற்கு பல சிறப்புகள் இருக்கிறது. சைவ வைணவ கோவில்கள் தான் இங்கு அதிகம். அதே போல் மிகவும் பிரசித்தி பெற்ற மகாமக குளமும் இங்கு தான் இருக்கிறது.
இந்த குளத்தில் முறையாக நீராடுவதன் மூலம் நம் பாவங்களை போக்கிக் கொள்ள முடியும். இன்னும் சொல்லப்போனால் காசியில் தீராத பாவம் கூட இங்கு தீரும் என்பது ஐதீகம்.
அதேபோல் நவகிரகங்களின் கோவில்களும் இங்கு தான் இருக்கிறது. மேலும் சூரிய கதிர்கள் பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் பூமியின் மீது படுகிறது. அவ்வாறு விழும் இடம் தான் இந்த கும்பகோணம்.
கோவில் நகரம் கும்பகோணம்
அது மட்டும் இன்றி சூரியன் தன் ஒளியை இழந்த போது இங்கு வந்து பெருமாளை வணங்கி தன் சக்தியை திரும்ப பெற்றார். அதேபோல் தேவர்கள் தங்கள் துன்பத்தை போக்க கும்பகோணத்தில் வழிபட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
இதன் வரலாறு என்று பார்க்கையில் உலகம் அழிய போவதை அறிந்த பிரம்மன் தன் ஆற்றலை ஒரு கும்பத்தில் போட்டு இமயமலை உச்சியில் வைத்தார். உலகம் அழியும்போது இந்த கும்பம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு நின்ற இடம் தான் கும்பகோணம்.
அந்த கும்பத்தை வில் அம்பு மூலம் தகர்க்கும் சிவபெருமான் அங்கு ஒரு லிங்கத்தை எழுப்பி அதனுள் ஐக்கியமாகிறார். இப்படி பல்வேறு வரலாறுகளைக் கொண்ட இந்த குடந்தை சோழர்களின் செல்வ கருவூலமாகவும் இருந்திருக்கிறது.
பாவங்கள் போக்கும் மகாமக குளம்
மேலும் காசியை போல் இங்கும் எட்டு திசைகளில் 8 பைரவர்கள் காவல் புரிகின்றனர். இப்படிப்பட்ட பல சிறப்பு வாய்ந்த இந்த கும்பகோணத்தின் மறு பெயர் குடந்தை.
இந்த இடத்தில் தான் கணிதமேதை ராமானுஜம் வளர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கோவில்களுக்கு மட்டுமல்லாமல் சிற்பக் கலைகளுக்கும் பெயர் போனது தான் குடந்தை.
அதேபோல் கும்பகோணம் வெற்றிலை, டிகிரி காபி ஆகியவையும் இங்கு வெகு பிரபலம். இப்படி பல்வேறு சிறப்புகள் நிறைந்த கும்பகோண கோவில்களில் வழிபட்டால் கர்ம வினைகள் நீங்கி புண்ணிய பலன்கள் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.