Teenz Movie review: இந்தியன் 2 ஜூலை 12 ரிலீஸ் என்றதுமே வேறு படங்கள் எதுவும் அந்த தேதியில் வெளியாகவில்லை ஆனால் தன்னம்பிக்கையோடு தன் டீன்ஸ் படத்தை அதே நாளில் ரிலீஸ் செய்திருக்கிறார் பார்த்திபன். அது வொர்க் அவுட் ஆனதா என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.
பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் இப்படத்தில் யோகி பாபு உடன் 13 சிறுவர் சிறுமியர் நடித்துள்ளனர். டி இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எப்போதுமே தன்னுடைய படங்களில் புதுமையை விரும்பும் பார்த்திபன் இந்த முறை அமானுஷ்யத்தை கையில் எடுத்துள்ளார்.
அதன்படி ஒரே அப்பார்ட்மெண்டில் வசிக்கும் சிறுவர்கள் ஒரு சிறுமியின் பேச்சைக் கேட்டு பேயை பார்ப்பதற்காக கிராமத்திற்கு செல்கிறார்கள். ஆனால் வலி மாறி காட்டுக்குள் செல்லும் சிறுவர்கள் திடீரென அமானுஷ்ய வளையத்தில் சிக்குகின்றனர்.
ஒவ்வொருவராக காணாமல் போகும் நிலையில் அவர்களை காப்பாற்ற வருகிறார் பார்த்திபன். உண்மையில் அது அமானுஷ்யம் தானா? பார்த்திபன் சிறுவர்களை காப்பாற்றினாரா? அங்கு என்ன நடக்கிறது? போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இப்படம்.
பார்த்திபனின் அமானுஷ்ய முயற்சி
முதல் பாதி முழுவதும் கொஞ்சம் திகில் கலந்த அமானுஷ்யமாக செல்கிறது. அதுவே இரண்டாம் பாதியில் அறிவியல் பக்கம் திரும்புகிறது. ஏதோ ஒரு ட்விஸ்ட் இருக்கும் என படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அது இல்லை என்பதுதான் வருத்தம்.
ஒரே மாதிரி நகர்ந்து கொண்டிருக்கும் திரை கதையில் சிறு பிள்ளைகளின் நடிப்பு பாராட்ட வைத்திருக்கிறது. அதே சமயம் அவர்களின் அளவுக்கு மீறிய முதிர்ச்சியான பேச்சும் நடவடிக்கைகளும் இன்றைய 2k கிட்ஸை கண்முன் காட்டி இருக்கிறது.
மேலும் சிறுவர்களின் அளப்பறையால் நகரும் கதையில் பார்த்திபனின் கதாபாத்திரம் ஸ்பீட் பிரேக்கர் போல் உள்ளது. அவரை தொடர்ந்து யோகி பாபு சில காட்சிகளில் வந்துவிட்டு செல்கிறார். பின்னணி இசையை பொருத்தவரையில் இமான் ஸ்கோர் செய்துள்ளார்.
இப்படியாக பார்த்திபனின் அமானுஷ்ய முயற்சி கொஞ்சம் தடுமாறி இருக்கிறது. ஆனாலும் அவருடைய வித்தியாசமான கதைக்களத்திற்காக படத்தை ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்.
சினிமா பேட்டை ரேட்டிங்: 2.25/5