Traditional Drink: பண்டைய தமிழர்களின் உணவு பழக்கங்களுக்கு பின்னால் பல அறிவியல் மற்றும் மருத்துவ காரணங்கள் இருக்கிறது. ஆனால் காலப்போக்கில் அது அழிந்து போனதோடு உடலுக்கு கேடான பல விஷயங்கள் மனிதனை ஆட்டி படைக்கிறது.
இப்படி மறக்கடிக்கப்பட்ட சங்க கால தமிழர்களின் உணவின் ஒரு பகுதி தான் கள் எனப்படும் பானம். இதை மதுவுக்கு சமமாக இப்போது பேசி வருகிறார்கள். ஆனால் அந்த காலத்தில் இது உடலுக்கு புத்துணர்ச்சி தரும் பானமாகவும் மருத்துவ குணங்கள் நிறைந்த ஊட்டச்சத்து மிகுந்ததாகவும் இருந்துள்ளது.
இன்னும் சொல்லப்போனால் அப்போது பெண்கள் கூட இதை அளவாக குடித்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன. இதன் மூலம் அவர்களின் சருமம் பளபளப்பாக இருந்துள்ளது. அதேபோல் காலையில் இந்த கல்லை குடிப்பதால் ஆண்களுக்கு உடல் வலிமையும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
மேலும் கிராமப்புறங்களில் காயங்கள் ஆறுவதற்கு இதை குடிக்கும் பழக்கமும் இருக்கிறது. தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்கவும் இது ஒரு மருந்தாக பயன்படுகிறது. இப்படி பல மருத்துவ குணங்கள் இதில் நிறைந்துள்ளது.
அப்படிப்பட்ட கள் பல வகைப்படும். அதில் பனை மரத்திலிருந்து இறக்கப்படும் பனங்கள் தென்னை மரத்திலிருந்து இறக்கப்படும் தென்னங்கள் மட்டுமல்லாமல் இன்னும் சில வகைகளும் இருக்கின்றன.
உடலுக்கு நன்மை தரும் கள்
அதன்படி அரிசியிலிருந்து எடுக்கப்படும் அரிசிக்கள், நெல்லிலிருந்து எடுக்கப்படுவது நறவு தேனில் இருந்து எடுக்கப்படுவது தேறல் என அழைக்கப்படுகிறது. இது மட்டும் இன்றி தோப்பி, அரியல், காந்தாரம், வேரி, மட்டு, பிழி என பல வகைகள் இருக்கின்றது.
மேலும் வெற்றி கொண்டாட்டத்திற்காகவும் கடவுளுக்கு படைக்கவும் சங்ககாலத்தில் இந்த கள்ளை பயன்படுத்தி இருக்கின்றனர். ஆனால் எதுவுமே அளவாக தான் இருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
அதன்படி இயற்கையான கள் எனப்படுவது மரத்திலிருந்து இறக்கப்பட்டு 10 மணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும். இவ்வாறாக உணவின் ஒரு பகுதியாகவும் மருந்தாகவும் இருந்த கள் காலப்போக்கில் கள்ளச்சாராயத்தால் அழிந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
தற்போது இந்த கள்ளச்சாராயத்தால் எத்தனை பேரின் உயிர் போனது என்பதை கண்கூடாக பார்த்தோம். ஆனால் கள் குடித்து கல்லீரல் கெட்டுப் போனவரும் இல்லை உயிர் போனவரும் இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.