புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

கடன் அன்பை முறிக்கும்! அந்தக் கடன் இல்லாமல் எப்படி வாழ்வது? அதற்கான பக்காவான வழிமுறைகள் இதோ!

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை எந்தக் காலமாக இருந்தாலும் கடன் என்ற சொல்லை யாரும் உச்சரிக்காமல் கூட இருக்க முடியாது என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படி கடன் வாழ்க்கையோடு இணைந்த ஒன்றாகவே மனிதர்களின் வாழ்க்கை சூழலில் மாறிவிட்டது. அந்தக் கடன் இல்லாமல் எப்படி வாழ்வது என்பதற்கான ஆலோசனைகளை இந்த கட்டுரையில் மூலம் தெரிந்துகொள்வோம்.

‘கடன் வாங்கிக் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்’ என்ற பழமொழி உண்டு. கடன் என்பது கையில் பணம் இல்லாத நிலையில் ஒரு செலவை ஈடுகட்ட அந்தப் பொருளை வாங்க மற்றொருவரிடம் இருந்தோ அல்லது, கடன் நிறுவனத்திடம் இருந்தோ குறிப்பிட்ட காலத்தில் திரும்ப செலுத்திவிடுவதாகக் கூறி பெறும் தொகை. அதற்கு வட்டி கணக்கிடப்படும். இந்தக் கடன் எத்தனை பேர் வாழ்க்கையில் புகுந்து விளையாடி உள்ளது? எத்தனை பேர் வாழ்க்கையை நிம்மதி இல்லாமல் செய்துள்ளது? எத்தனை பேர் வாழ்க்கையை வாழ விடாமல் செய்துள்ளது? என்று நினைத்துப் பார்த்தால் கடன் மேல் கோபம் வரும்.

ஆனால், ‘கடன் இல்லாமல் வாழ்க்கையே இல்லை’ என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘கடன் வாங்கித் தின்றவன் கடைத்தேற மாட்டான்’ என்றும் ‘கடன் வாங்கிப் பயிர் செய்வனும், மரம் ஏறிக் கைவிட்டவனும் ஒன்று’ என்று சொலவடை கூறுவர். ஏன் கடன் இல்லாமல் மக்கள் வாழ்வதில்லையா? தம்மிடம் உள்ளது போதும் என்று இருப்பதை கொண்டு நிம்மதியாக வாழ்வோரும் இதே உலகில்தானே உண்டு!

அதனால்தான் ‘கடன் இல்லாத கஞ்சி கால் வயிறு’. அது நிம்மதிக்கான கூற்று. ‘கடன் அன்பை முறிக்கும்’ என்பதை அறிந்தோர் அதைக் கேட்பதும் இல்லை. கொடுப்பதும் இல்லை. இந்த நிலையில் கடன் பட்டு அதிலிருந்து மீண்டு வந்த ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது: ”கடன் கொடுத்தவர்களை நீங்கள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்! உங்களிடம் கடன் கொடுத்தவர்களை சந்திக்கும்போது அவர்கள் பாசிட்டிவாக இருப்பர். ஒருவேளை பயப்பட்டால், அவர்கள் உங்களைவிட அதிகம் பயபடுவர்.

கடன் வாங்கித்தான் மற்றொரு கடனை அடைக்க வேண்டும் என்ற மன நிலையை மாற்றிவிடுங்கள்; அது மேலும் உங்களை கடன் காரனாக்கிவிடும். உங்களின் மொத்தக் கடன் விவரங்களை எழுதி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கடன், இந்தக் கடன் என்று எதையும் குத்து மதிப்பாக வைத்திருக்க வேண்டாம்!

சிறிய கடன்களை முதலில் முடிக்க பாருங்கள். சிறிய கடன்களை முதலில் அடைந்துவிட்டால், பெரிய கடன்களை அடைப்பதற்கான வழிகள் உங்களுக்கு கிடைக்கும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்! அழுத்தங்களும் குறையும்! எது ரேட் ஆப் இன்டரஸ்ட் மற்றும் அதிக வட்டியுள்ளவற்றை தேர்ந்தெடுத்து அதை அடைத்துக் கொண்டே வந்தால் கடன் பிரச்சனையை குறைக்கலாம்” என்று கூறியுள்ளார்.

இவரது கடன் தீர்வு பற்றிய கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகள் கூறி வருகின்றனர். ஆனால், கடன் என்பது பிரச்சனை என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒரேயடியாக கடனே வாங்காமல் இருக்க முடியாது என்றாலும் அக்கடனை குறைத்து வாங்கி, வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மகிழ்சியுடன் வாழ இவை வழிகாட்டும் என பலரும் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -spot_img

Trending News